பொது இடங்களில் மாட்டிறைச்சி வெட்ட தடை; ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு...!
கோவில் திருவிழாக்கள் மற்றும் கிராமப் பஞ்சாயத்து வழங்கும் பொது இறைச்சிக் கூடம் தவிர மற்ற இடங்களில் கால்நடைகளை வெட்டுவது குற்றம் என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை அருகே இருக்கும் மாதவலயம் பகுதியை சேர்ந்த சையத் அலி பாத்திமா என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், மடவாலயம் கிராமத்தில் அவரது வீட்டின் அருகே அனுமதியின்றி மாட்டிறைச்சி கடை நடத்தப்படுகிறது என்றும், அந்த மாட்டிறைச்சி கடையால் குடியிருப்பு பகுதிக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே அந்த மாட்டிறைச்சி கடையை வேறு இடத்திற்கு மாற்ற உரிய உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் கிராம பஞ்சாயத்து தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், மாட்டிறைச்சி கடை வைத்திருப்பவர் ஒரு கோழி இறைச்சி கடை நடத்துவதற்கு மட்டுமே உரிமம் பெற்ற நிலையில், மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார் என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட உரிமம் இல்லாமல், எந்த ஒரு நபரும், எந்த இடத்திலும் கால்நடைகள், செம்மறி, ஆடு, பன்றி, ஆகியவற்றை வெட்ட அனுமதியில்லை.
கோவில் திருவிழாக்கள் மற்றும் கிராமப் பஞ்சாயத்து வழங்கும் பொது இறைச்சிக் கூடம் தவிர மற்ற இடங்களில் கால்நடைகளை வெட்டுவது குற்றம் என்று சட்ட விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் உள்ளாட்சி அமைப்பின் உரிய உரிமம் பெறாமல், மாட்டிறைச்சி கடை நடத்தி வருவதாக உள்ளாட்சி தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். எனவே, உரிமம் பெறாமல் மாட்டிறைச்சி கடை நடத்தினால், அதை ஆய்வு செய்து தடை செய்ய வேண்டியது அரசு அதிகாரிகளின் பொறுப்பு.
எனவே, உரிமம் பெறாமல் மாட்டிறைச்சி கடை நடத்துவது குறித்து, தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் ( BDO) மூன்று வாரங்களுக்குள் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று நீதிபதி உத்தரவிட்டார்.