வெளியே போறேன்னு சொல்லிவிட்டு மறைந்திருந்த கணவன்! உள்ளே நுழைந்த அடுத்த நொடி 2 பேரையும் சரமாரிய வெட்டிய கணவன்...! கதறும் 5 குழந்தைகள்.. பகீர் சம்பவம்!!!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மனைவி மற்றும் அவருடன் நெருக்கமாகப் பழகி வந்த நபரை கட்டிடத் தொழிலாளி ஒருவர் அரிவாளால் வெட்டியும், கற்களால் தாக்கியும் கொலை செய்துள்ளார். இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கொலை செய்துவிட்டு அப்பகுதியில் சுற்றித் திரிந்த கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியுடன் பழகிய நபர் மீது ஆத்திரம்
பாளையம்பட்டி கொத்தனார் காலனியைச் சேர்ந்த சரவணக்குமார் (26), கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பொன்னழகு (21). இருவரும் ஒரே பகுதியில் கட்டிட வேலைக்குச் சென்றபோது, பொன்னழகுக்கும் ஆனந்தராஜ் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான ஆனந்தராஜுடன் பொன்னழகு நெருக்கமாகப் பழகி வந்ததை அறிந்த சரவணக்குமார், இருவரையும் பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் பழக்கத்தைத் தொடர்ந்ததால், இருவரையும் நேரில் பிடிக்கத் திட்டமிட்டுள்ளார்.
வீட்டிற்குள் புகுந்து இருவரையும் வெட்டிக் கொலை
சம்பவத்தன்று இரவு வெளியே செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு கிளம்பிய சரவணக்குமார், அருகிலேயே மறைந்திருந்து கண்காணித்துள்ளார். கணவர் வீட்டில் இல்லை என நினைத்த ஆனந்தராஜ், பொன்னழகைச் சந்திக்க வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த சரவணக்குமார், இருவரையும் பார்த்ததும் ஆத்திரமடைந்து அங்கிருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். தொடர்ந்து கற்களாலும் தாக்கியதில் பொன்னழகும் ஆனந்தராஜும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சரவணக்குமார் - பொன்னழகு தம்பதியின் மூன்று குழந்தைகளும் எழுந்து அழுததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த அருப்புக்கோட்டை நகர் போலீசார் அங்கு சென்று இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, அருப்புக்கோட்டை பஜார் பகுதியில் சுற்றித்திரிந்த சரவணக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5 குழந்தைகள் தவிப்பு
இந்த இரட்டைக் கொலையால் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. சரவணக்குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மூன்று குழந்தைகளும் தாயையும் தந்தையையும் இழந்த நிலையில் உள்ளனர். மறுபுறம், ஆனந்தராஜின் மனைவி காஞ்சனா தனது கணவரை இழந்ததுடன், இரண்டு ஆண் குழந்தைகளையும் தனியாக வளர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஒரு குடும்பப் பிரச்சினை கொடூரமான கொலையில் முடிந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.