உயிரோடு இருந்தவரை அலட்சியத்தால் சான்றிதழில் கொன்ற அதிகாரிகள்.. அரசு அலுவலகத்திற்கு அலையும் முதியவர்.!

உயிரோடு இருந்தவரை அலட்சியத்தால் சான்றிதழில் கொன்ற அதிகாரிகள்.. அரசு அலுவலகத்திற்கு அலையும் முதியவர்.!


Ariyalur Jayankondam Aged Man Went Govt Office about Get I Am Live Certificate

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயன்கொண்டம், முத்துவாஞ்சேரி கிராமத்தை சார்ந்தவர் கோவிந்தன் (வயது 72). இவர் வயது மூப்பின் காரணமாக அரசு வழங்கும் ரூ.1000 உதவித்தொகையை வைத்து வாழ்க்கையை நடத்தி வந்த நிலையில், இம்மாதத்திற்கான உதவி தொகையை எடுக்க வங்கி சேவை மையத்திற்கு சென்றுள்ளார். 

அப்போது, அவரின் வங்கிக்கணக்கில் போதிய பணம் இருந்தும், கைரேகை பதிவு ஆகவில்லை. இதனையடுத்து, ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் இருக்கும் ஸ்டேட் பேங்குக்கு கோவிந்தன் நேரில் சென்ற நிலையில், காசோலை எழுதிக்கொடுத்து பணம் கேட்டுள்ளார். அப்போது, அங்கிருந்த அதிகாரி நீங்கள் இறந்துவிட்டதாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் பணம் எடுக்க இயலாது என்று தெரிவித்துள்ளார்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கோவிந்தன், அதிகாரிகளிடம் என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டுள்ளார். அதிகாரிகளோ நீங்கள் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை கிராம நிர்வாக அதிகாரியிடம் வாங்கி வர தெரிவித்துள்ளனர். கிராம நிர்வாக அதிகாரியை சந்தித்த கோவிந்தன், வாழ்நாள் சான்றிதழ் வழங்க கோரிக்கை வைத்துள்ளார்.

Ariyalur

கிராம நிர்வாக அலுவலர் வாழ்நாள் சான்றிதழை வழங்கிய நிலையில், அதனை வங்கிக்கு கொண்டு சென்றபோது தாசில்தார் அலுவலகத்தில் சான்றிதழ் வாங்க சொல்லியுள்ளனர். இதனால் முதியவர் கோவிந்தன் தான் உயிருடன் இருக்கிறேன் என்ற சான்றிதழை வாங்க அலைந்து வருகிறார். ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் வழங்கக்கூறி மனுவை அளித்துள்ளார். 

உயிருடன் இருக்கும் நபரை எவ்வித விசாரணையும் இன்றி உயிரிழந்துவிட்டதாக பதிவு செய்த அதிகாரிகள், அவர் உயிருடன் உள்ளார் என்ற சான்றிதழை வாங்கிவரச்சொல்லி அலைக்கழித்துள்ள துயரம் பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.