இரயில் பயணம் மீது ஏற்பட்ட காதல்.. பெற்றோர் நிறவேற்றாததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு..!
தேனி மாவட்டம் பேச்சியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தவர்கள் ராமகிருஷ்ணன் - ஜெயா தம்பதியினர். இவர்களுக்கு முத்து மற்றும் பாலாஜி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ராமகிருஷ்ணன் கூலி வேலை செய்தும் அவரது மனைவி ஜெயா அப்பகுதியில் உள்ள ஏலக்காய் கடையில் வேலை செய்தும் வந்துள்ளனர்.
இந்நிலையில் இளைய மகன் பாலாஜிக்கு படிப்பு சரியாக வராத காரணத்தால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக சொல்லப்படுகிறது. போடியில் ரயில்வே பணிகள் தொடங்கியதில் இருந்தே பாலாஜி தனது நண்பர்களுடன் ரயில்வே நிலையத்தை எப்போதும் சுற்றி வந்துள்ளார்.

இவ்வாறு இருக்கையில் போடியில் ரயில்வே சேவை தொடங்கியதை அறிந்த பாலாஜி தினமும் அங்கு வந்து நின்று ரயில்களில் பயணம் செய்வோரை பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் பாலாஜிக்கு தானும் தன் குடும்பத்தோடு ரயிலில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.
இதனையடுத்து தன் பெற்றோரிடம் தன்னை சென்னை அல்லது மதுரைக்கு இரயிலில் கூட்டி செல்லுமாறு பல முறை கூறி இருக்கிறான். ஆனால் கூலி தொழில் செய்து வரும் அவனுடைய பெற்றோர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து அந்த சிறுவன் இரயிலில் பயணம் செய்யும் குடும்பங்களை பார்த்து தானும் இவ்வாறு குடும்பத்தினரோடு இரயிலில் போக வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து தன் பெற்றோர் தன்னுடைய ஆசையை நிறைவேற்ற முயற்சிக்கவில்லை என்ற மன வருத்தத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் மாலை ஜெயா வேலை முடித்து வந்து வீட்டை திறந்ததும் மகன் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பெயரில் அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் சிறுவன் பாலாஜி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைதொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சிறுவன் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில் பாலாஜி இரயிலில் செல்ல முடியாத ஏக்கத்தில் தான் தற்கொலை செய்துள்ளான் என்று உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.