உலகக்கோப்பை அணியில் இவர் நிச்சயம் இடம் பெற வேண்டும்; எதற்காக தெரியுமா? யுவராஜ் விளக்கம்
2011ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றுவதற்கு முக்கிய பங்காற்றியவர் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங். இவர் இந்த உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது பெற்றார். தற்போது இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வரும் யுவராஜ் சிங் வரும் உலக கோப்பை அணியில் தோனியின் பங்களிப்பு நிச்சயம் தேவை என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் தோனியின் பேட்டிங் திறமையில் சற்று தொய்வு ஏற்பட்டது. இதனால் அவர் உலக கோப்பை வரை நீடிப்பாரா என்ற சந்தேகங்கள் பலருக்கும் இருந்தன. ஆனால் கவாஸ்கர் போன்ற ஒரு சிலர் மட்டும் தோனியின் கிரிக்கெட் அனுபவம் இப்போது உள்ள இளம் வீரர்களுக்கு நிச்சயம் தேவை என தோனிக்கு சாதகமாக பேசி வந்தனர். அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக தோனி தற்பொழுது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார்.
இந்நிலையில் தோனியை குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் "தோனி கிரிக்கெட் பற்றிய நுணுக்கங்களை கரைத்துக் குடித்தவர். கிரிக்கெட் சார்ந்த அறிவு அவருக்கு நிறையவே உள்ளது. ஒரு விக்கெட் கீப்பராக அவர் ஆட்டம் முழுவதையும் கண்காணிக்க முடியும். அவ்வாறு கண்காணித்து முடிவுகளை எடுப்பதில் கைதேர்ந்தவர் அவர். எனவே இந்த உலக கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை சிறந்த முறையில் வழி காட்டவும், முக்கியமான தருணங்களில் முடிவுகளை எடுக்கவும் தோனியின் பங்களிப்பு மிகவும் அவசியம்" என தெரிவித்துள்ளார்.