எதிர்பார்ப்பை எகிற வைத்த கடைசி டெஸ்ட் போட்டி!!.. இந்திய-ஆஸ்திரேலிய பிரதமர்கள் முன்னிலையில் மோதல்..!Tight security arrangements have been made at the Ahmedabad ground as the Prime Ministers of India and Australia are expected to witness the final Test match together.

இந்திய-ஆஸ்திரேலிய பிரதமர்கள் இணைந்து கடைசி டெஸ்ட் போட்டியை காண உள்ளதால் ஆமதாபாத் மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நாக்பூரில் நடந்த முதலாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2 வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

3 வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 4 வது மற்றும் கடைசி போட்டி ஆமாதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு 4 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனிஸ், பாரத பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து கடைசி டெஸ்ட் போட்டியை பார்த்து ரசிக்க உள்ளார். இந்த போட்டியில் பிரதமர் மோடி டாஸ் போட்டு போட்டியை தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த போட்டியை இந்திய அணி வெல்லும் பட்சத்தில் தொடரை கைப்பற்றுவதுடன், ஜூன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய-ஆஸ்திரேலிய பிரதமர்களின் வருகையால் மைதானத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டியை காண 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும்.