1 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை சாய்த்த நியூசிலாந்து: 2 வது டெஸ்ட் போட்டியில் 'திரில்' வெற்றி..!

1 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை சாய்த்த நியூசிலாந்து: 2 வது டெஸ்ட் போட்டியில் 'திரில்' வெற்றி..!



new-zealand-won-the-2nd-test-against-england-by-1-run

இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முன்னதாக நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 267 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் கடந்த 24 ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸை துவக்கிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 435 ரன்கள் சேர்த்த நிலையில் 'டிக்ளேர்' செய்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி 209 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  'பாலோ-ஆன்' ஆனது. இதன் காரணமாக 226 ரன்கள் பின்தங்கிய நிலையில், தொடர்ந்து தனது  2வது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் சேர்த்தது.

நியூசிலாந்து அணி தரப்பில் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் 25 ரன்களுடனும், ஹென்றி நிகோல்ஸ் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்று நடைபெற்ற 4 ஆம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்த கேன் வில்லியம்சன் 138 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார்.  நியூசிலாந்து அணி தனது 2வது இன்னிங்சில் 162.3 ஓவர்களில் 483 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

இதனை தொடர்ந்து 258 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்டநேரம் முடிவில் 11 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில், இன்று தொடங்கிய கடைசீநாள்  ஆட்டத்தில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இறுதியில் இன்றைய 2 வது ஷெசன் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 256 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் பரபரப்பான 5 ஆம் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 1 ரன்கள் வித்தியாசத்திக் 'திரில்' வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக நீல் வாக்னர் 4, டிம் சவுத்தி 3, ஹென்றி 2  விக்கெட்களை கைப்பற்றினர்.