விளையாட்டு

அனல் பறக்கும் சமி பந்துவீச்சு! குறைந்த போட்டியில் 100 விக்கெட்டுகள் எடுத்து புதிய சாதனை

Summary:

mohammed sami takes 100th wicket in 56 matches

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி இன்று நேப்பியர் நகரில் உள்ள மெக்லேன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய தொடரில் மூன்று போட்டிகளிலும் ஆடிய தினேஷ் கார்த்திக் இந்த போட்டியில் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அம்பத்தி ராயுடு மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆல்-ரவுண்டராக விஜய் சங்கருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் குல்தீப் யாதவ், சாகல் ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக மார்டின் கப்டில் மற்றும் கொலின் முன்றோ களமிறங்கினர். முதல் ஓவரில் நியூசிலாந்து அணியினர் 5 ரன்கள் எடுத்தனர். பின்னர் இரண்டாவது ஓவரை முகமது சமி வீசினார். அவரது பந்தில் அனல் பறந்தது. அந்த ஓவரின் கடைசி பந்தில் மார்டின் கப்தில் 5 ரன்கள் எடுத்த நிலையில் சமி பந்தில் போல்டானார். இதன் மூலம் முகமது சமி சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது 100 ஆவது விக்கெட்டை வீழ்த்தினார். 

mohammed shami க்கான பட முடிவு

சமி இந்த மைல்கல்லை 56 ஆவது ஒருநாள் போட்டியில் எட்டியுள்ளார். இதன் மூலம் குறைந்த போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இவருக்கு முன்னர் இர்பான் பதான் 59 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியது தான் இந்திய அளவில் முதல் இடத்தில் இருந்தது. சர்வதேச அளவில் சமி தற்பொழுது நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் போல்டுடன் சேர்ந்து ஆறாவது இடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் முதலிடத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீரர் ரஷீத் கான் 44 போட்டிகளில் 100 விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் முதல் இடத்தில் உள்ளார்.

தொடர்ந்து நான்காவது ஓவரையும் வீசிய சமி மற்றொரு துவக்க ஆட்டக்காரரான காலின் முன்றோவை போல்டாகி வெளியேற்றினார். முன்றோ 8 ரன்கள் மட்டும் எடுத்து பெவிலியன் திரும்பினார். கடைசி நேர நிலவரப்படி 13 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது.


Advertisement