மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
திக்.. திக்.. திக்.. கடைசி ஓவர்..!! கடைசி பந்தில் ஓடியே வெற்றி பெற்ற லக்னோ அணி..!!
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி பெற்றது.
கடந்த 2008 ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 14 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று நடபெற்ற 15 வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து, விராட் கோலி-பாப் டு பிளிசி ஜோடி பெங்களூரு அணிக்கு தொடக்கம் அளித்தது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய கோலி 35 பந்துகளில் தனது 46 வது அரைசதத்தை நிறைவு செய்ததுடன் 61 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் டூ பிளசியுடன் இணைந்து அதிரடியாக விளையாட, இந்த கூட்டணியை பிரிக்க முடியாமல் லக்னோ அணி திண்டாடியது. 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 212 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் ஆட்டமிழந்த மேக்ஸ்வெல் 59 (29) ரன்கள் குவித்தார். டூ பிளிசி 79 (46) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனை தொடர்ந்து, 213 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு கைல் மேயர்ஸ்-கே.எல்.ராகுல் ஜோடி தொடக்கம் அளித்தது. 4 ஓவர்களுக்குள் கைல் மேயர்ஸ் (0), தீபக் ஹூடா (9 ரன்), குருணல் பாண்ட்யா (0) ஆகியோரது விக்கெட்டை இழந்து அந்த அணி தடுமாறியது. பின்னர் களமிறங்கிய மார்க் ஸ்டோனிஸ் அதிரடியால் அந்த அணி மீண்டு எழுந்தது.
மார்க் ஸ்டோனிஸ் 65 (30), கே.எல்.ராகுல் 18 ரன்களுடன் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் வாண வேடிக்கை நிகழ்த்தியதுடன் 15 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவர் 62 (19) ரன்களில் ஆட்டமிழக்க, பரபரப்பு தொற்றியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட 2 விக்கெட்டுகளை தாரை வார்த்த லக்னோ அணிக்கு கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்டது.
பேட்டிங் முனையில் இருந்த அவேஷ்கான் மட்டையில் பந்து படாவிட்டாலும் ரன் எடுப்பதில் குறியாக ஓடினார். பெங்களூரு விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் வேகமாக செயல்படாததால் ஒரு ரன் லக்னோவுக்கு கிடைத்ததுடன், அந்த அணி வெற்றியும் பெற்றது.