கடைசி ஓவரில் எமனாக வந்த அந்த ஒரு பந்து!! குஜராத் அணியின் வெற்றியும், கடைசி ஓவரில் நடந்த த்ரில் சம்பவமும்..

கடைசி ஓவரில் எமனாக வந்த அந்த ஒரு பந்து!! குஜராத் அணியின் வெற்றியும், கடைசி ஓவரில் நடந்த த்ரில் சம்பவமும்..


IPL T20 2022 GT vs PBKS 2 six in 2 balls

கடைசி நிமிடத்தில் பஞ்சாப் அணி வீரர் செய்த தவறால் அந்த அணி தோல்வியை சந்தித்துள்ளது.

குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் கடைசி இரண்டு பந்தில் சிக்ஸர் அடித்து த்ரில் வெற்றிபெற்றது குஜராத் அணி. ஐபில் 15 வது சீசன் முதல் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் நேற்றைய போட்டியில் மோதின.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பஞ்சாப் அணி வீரர் லிவிங்ஸ்டன் 27 பந்துகளில் 64 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி வீரர்கள் களமிறங்கினர்.

தொடக்க ஆட்டக்காரர் மேத்யூவ் வேட் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதேநேரம் சுப்மன் கில் மற்றும் அறிமுக வீரர் சாய் சுதர்ஷன் ஜோடி இருவரும் பஞ்சாப் அணி வீரர்களின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். 2வது விக்கெட்டிற்கு மட்டும் இந்த ஜோடி 101 ரன்களை சேர்த்தது.

ஒருகட்டத்தில் சாய் சுதர்சன் 35 ரன்களுக்கும், சுப்மன் கில் 96 ரன்களில் ஆட்டமிழக்க குஜராத் அணியின் வெற்றி கேள்விக்குறியானது. டேவிட் மில்லர் மற்றும் பாண்டியா இருவரும் அதிரடியாக விளையாட, கடைசி 6 பந்துகளில் 19 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை உருவானது.

கடைசி ஓவரை பஞ்சாப் அணி வீரர் ஸ்மித் வீச, பாண்டியா எதிர்கொண்டார். முதல் பந்தை ஸ்மித் அகலபந்தாக வீசியதன் மூலம் குஜராத் அணிக்கு 1 ரன் கிடைத்தது. ஆனால் அடுத்த பந்திலையே பாண்டியா ரன் அவுட் முறையில் வெளியேறினார். இதனை அடுத்து திவாட்டியா களமிறங்கினார்.

5 பந்துகளில் 18 ரன்கள் அடித்தால் குஜராத் அணி வெற்றி என்ற நிலையில், இரண்டாவது பந்தில் திவாட்டியா ஒரு ரன் அடிக்க, டேவிட் மில்லர் ஆடும் முனைக்கு வந்தார். மூன்றாவது பந்தில் டேவிட் மில்லர் பவுண்டரி அடிக்க, 3 பந்துக்கு 14 ரன் தேவைப்பட்டது.

GT vs PBKS

4 வது பந்தை மில்லர் பீல்டரிடம் நேராக அடித்துவிட்டு ரன் எடுக்க முயற்சித்தனர். பீல்டர் அந்த பந்தை பவுலர் ஸ்மித்திடம் வீச, அவர் ரன் அவுட் செய்கிறேன் என்ற பெயரில் ஓவர்த்ரோ முறையில் ஒரு ரன் குடுத்தார். இதனால் திவாட்டியா மீண்டும் ஆடும் முனைக்கு செல்ல, அடுத்த இரண்டு பந்தில் 12 ரன்கள் அடித்து குஜராத் அணி வெற்றி பெற்றது.

ஒருவேளை ஸ்மித் அந்த பந்தை ஓவர்த்ரோ வீசாமல் இருந்திருந்தால் மில்லர் இரண்டு பந்தில் இரண்டு சிக்ஸர் அடித்திருப்பாரா என்பது கேள்வி குறிதான். அப்படியே அவர் இரண்டு சிக்ஸர் அடித்திருந்தாலும்கூட, ஆட்டம் சமநிலைக்கு சென்று சூப்பர் ஓவர் வந்திருக்கும். இப்படி கைமேல் வந்த வாய்ப்பை பஞ்சாப் அணி அந்த ஒரே பந்தில் தவறவிட்டது பஞ்சாப் அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.