டி-20 உலகக்கோப்பை தொடர்: பயிற்சி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்..!India vs Australia clash in T20 World Cup series training match

எட்டாவது டி-20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடப்பதை ஒட்டி கடந்த வாரம் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அங்கு சுற்றுப்பயணம் ,மேற்கொண்டுள்ளது. உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாக பயிற்சி பெறும் விதமாகவும் இதுவரை ஆஸ்திரேலிய மைதானங்களில் விளையாடிய அனுபவம் இல்லாத இளம் வீரர்களை தயார் செய்யும் விதமாகவும் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளது.

முதலில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக உலகின் அதிவேக மைதானமான பெர்த்தில் இரண்டு பயிற்சி போட்டிகளில் இந்திய அணி விளையாடியது. லீக் போட்டிகள் துவங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் அதிகாரப்பூர்வ பயிற்சி போட்டிகளில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய அணி தனது முதல் பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற உள்ளதையொட்டி இரண்டு அணிகளும் முன்னதாகவே அங்கு முகாமிட்டுள்ளன.

இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட அனைத்து முன்னணி வீரர்களும் இந்த பயிற்சி ஆட்டத்தில் களம் காணுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டு இந்திய அணியுடன் இணைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் இந்த போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் கிளன் மேக்ஸ்வெல், டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், பேட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் போன்ற முன்னணி வீரர்கள் இந்த போட்டியில் விளையாட உள்ளனர்.. இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.