விளையாட்டு

IPL போட்டி நடத்துவதில் சிக்கல்! பெரும் குழப்பத்தில் BCCI

Summary:

Getting lot of confusion on ipl 2019

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் IPL தொடரின் 12ஆவது சீசனை நடத்துவது தொடர்பாக BCCI மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளது. 

2008 ஆம் ஆண்டு துவங்கி ஒவ்வொரு வருடமும் IPL போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற 11 சீசன்களில் 9 சீசனுக்கான போட்டிகள் முழுவதும் இந்தியாவிலேயே நடந்தன. 2009 ஆம் ஆண்டு அனைத்து போட்டிகளும் தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. 2014 ஆம் ஆண்டில் முதல் பாதி போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திலும் மீத போட்டிகள் இந்தியாவிலும் நடைபெற்றன. 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 12வது IPL சீசனுக்கான வீரர்கள் ஏலம் சில நாட்களுக்கு முன்பு நிறைவுபெற்றது. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை அதிகபட்சமாக 8.5 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் அணி. 

இந்தியாவில் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக கட்சியின் ஆட்சிகாலம் 2019ல் நிறைவுபெறுகிறது. இதனால் 2019 மார்ச் - மே மாத இடைவெளியில் நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல் சமயத்தில் IPL போட்டிகளை நடத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. 

குறிப்பாக மைதானம் மற்றும் வீரர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுப்பதில் சிக்கல் நிகழும். இதனால் IPL 12வது சீசனுக்கான போட்டி அட்டவணையை BCCI இன்னும் அறிவிக்காமல் உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவித்த பின்பே IPL தொடருக்கான அட்டவணை வெளியாகும் என BCCI  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே ஐபிஎல் போட்டிகளை நடத்தவும் திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த சிக்கலான சூழ்நிலையில் 2019 ஆம் ஆண்டு IPL போட்டிகளை நடத்த 4 விதமான திட்டங்களை BCCI வகுத்துள்ளது. அவை:
1. கேரவன் முறை: இதில் அனைத்து அணி வீரர்களும் ஒரே இடத்தில் தங்கி போட்டிகளில் விளையாடுவது. இந்தமுறையில் 5-8 மைதானத்திற்குள் அனைத்து போட்டிகளும் நடத்தப்படும். 

2. நாட்டில் உள்ள சிக்கல் இல்லாத சிறிய மைதானங்களை தேர்வு செய்து போட்டிகளை நடத்துவது. 

3. 2014 ஆம் ஆண்டு போலவே பாதி போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்திலும், மீதி போட்டிகளை இந்தியாவிலும் நடத்துவது. 

4. 2009 ஆம் ஆண்டை போல் அனைத்து போட்டிகளையும் தென் ஆப்பிரிக்காவில் நடத்துவது. 

ஒருவேளை போட்டிகளை வெளிநாடுகளில் நடத்துவதால் BCCI க்கு எதிர்பார்த்த அளவில் வருமானம் கிடைப்பது சந்தேகம் தான். மேலும் விளம்பரதாரர்களுக்கும் விளம்பரம் செயவதற்கு ஒரு சுதந்திரம் கிடைக்காது. எனவே இந்த முடிவுகளை எடுப்பதில் BCCI மிகுந்த சிரமத்தில் உள்ளது. 


Advertisement