பரபரப்பான அரசியல் களம்; 3 அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ஆதரவாக ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தில் முறையீடு.!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அதிமுக எம்எல்ஏக்களான அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம், அதிமுக சட்ட அமைச்சர் வி சி சண்முகம், கொரடா ராஜேந்திரன் ஆகியோர் புகார் மனு அளித்ததன் பேரில் சபாநாயகர் மூன்று பேரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஏற்கனவே 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் பாராளுமன்ற தேர்தலோடு சேர்த்து இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது. மேலும் காலியாக உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மே 19 தேர்தல் நடத்தப்பட்டு பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகும் மே 23 அன்று தேர்வு முடிவு வெளியாக உள்ளது.
இந்நிலையில், இந்த 3 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யும் நோக்கில் நோட்டீஸ் அனுப்பியுள்ள சபாநாயகரின் செயலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ளதால் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை விதிக்க வேண்டும். சபாநாயகர் நடுநிலைமை தவறாமல் இருக்க வேண்டும். ஆனால் சபாநாயகர் தனபால் கட்சி நிர்வாகி போல செயல்படுகிறார். நடுநிலைமை தவறிவிட்ட காரணத்தினால், மூன்று எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கும் எடுக்கும் தார்மீக கடமையை அவர் இழந்துவிட்டார் என்று திமுக மனுவில் குறிப்பிட்டுள்ளது.
திமுகவின் இந்த மனுவை அவசர வழக்காக கருத்தில் கொண்டு வரும் திங்கள்கிழமை இது
தொடர்பான விசாரணை நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.