திமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய உறவா? எது முக்கியமோ அத பாக்குறது இல்ல... திட்டவட்டமாக கூறிய தமிழிசை சவுந்தராஜன்..!!!
பாஜக மற்றும் திமுக இடையே எந்தவிதமான ரகசிய உறவும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக அரசின் செயல்பாடுகள் மற்றும் சில அமைச்சர்களின் அணுகுமுறைகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அமைச்சர்கள் செயல்பாடு மீது விமர்சனம்
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த தமிழிசை சவுந்தரராஜன், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கல்வி மற்றும் பாடத்திட்ட விவகாரங்களில் கவனம் செலுத்தாமல் வேறு விஷயங்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார். அதேபோல், திமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் மக்கள் பிரச்சினைகளில் அக்கறை காட்டுவதற்குப் பதிலாக சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிடுவதிலேயே அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் விமர்சித்தார்.
இதையும் படிங்க: விரல் நுனியில் விவரங்களை வைத்து ஆளும் முதல்வர் விஜய்! புதுச்சேரியில் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்.... ஆட்டம்காணும் அரசியல் களம்..!!!
மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் தொடர்பாக தேவையற்ற அரசியல் செய்யப்படுவதாகக் கூறிய அவர், அந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்ட பிறகு தமிழக மக்களுக்கு பெரும் பயன் அளிக்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
மேகதாது திட்டம் குறித்து பாஜக நிலைப்பாடு
மேகதாது அணை விவகாரம் குறித்து பேசுகையில், தமிழகத்திற்கு உரிய நீர் கிடைக்க வேண்டும் என்பதே பாஜகவின் தெளிவான நிலைப்பாடு என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். இந்த விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரகசிய உறவு குற்றச்சாட்டுக்கு பதிலடி
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், அதை மத அடிப்படையிலான பிரச்சினையாக பார்க்காமல், பெரும்பான்மை இந்துக்களின் உணர்வுகளுடன் தொடர்புடைய விஷயமாக அணுக வேண்டும் என்றார்.
தொடர்ந்து, பாஜக மற்றும் திமுக இடையே ரகசிய உறவு இருப்பதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறி வருவதற்கு பதிலளித்த தமிழிசை, அத்தகைய குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை என்று தெரிவித்தார். தங்களுக்குள் எந்த ரகசிய உறவும் இல்லை என மறுத்த அவர், முதலில் தமிழகத்தில் நிலவி வரும் மின்தடை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார். மேலும், மின்வெட்டு மற்றும் மின்துறை தொடர்பான கோப்புகள் காணாமல் போவது போன்ற விவகாரங்களுக்கு யார் பொறுப்பு என்பது மக்களுக்குத் தெளிவாக தெரிய வேண்டும் என்றும் அவர் சாடினார்.
இதையும் படிங்க: BREAKING: சற்றுமுன்... மகன் மிதுனின் அரசியல் வருகை குறித்து அறிவிப்பை திட்டவட்டமாக அறிவித்த எடப்பாடி...! அதிரும் அரசியல் களம்..!!!