கடும் அரசியல் போட்டி! திமுக, அதிமுகவுக்கு செக் வைக்கும் CM விஜய்! அந்த 6 தொகுதிகளில் நடக்கப்போகும் மெகா ட்விஸ்ட்.!!!
தமிழகத்தில் காலியாக உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையிலேயே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தவெக, திமுக மற்றும் அதிமுக ஆகிய மூன்று முக்கிய அரசியல் சக்திகளும் இந்தத் தேர்தலை தங்களது அரசியல் செல்வாக்கை நிரூபிக்கும் முக்கிய வாய்ப்பாகக் கருதி தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளன.
தவெக தலைவர் விஜய், பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துள்ளார். இதேவேளை, அதிமுகவைச் சேர்ந்த பெருந்துறை, மதுராந்தகம், அம்பாசமுத்திரம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் எம்.எல்.ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ சி.விஜயபாஸ்கரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதால் மொத்தம் 6 தொகுதிகள் காலியாகியுள்ளன.
இதையும் படிங்க: இரட்டிப்பு பலத்துடன் இடைத்தேர்தலில் தவெகவுக்கு செக் வைக்கும் அதிமுக! களத்தில் வெடிக்கப்போகும் புதிய கூட்டணி குண்டு.!!!
மூன்று கட்சிகளுக்கும் முக்கியமான சோதனை
இந்த இடைத்தேர்தலால் நேரடியாக ஆட்சி மாற்றம் ஏற்படப்போவதில்லை என்றாலும், அரசியல் ரீதியாக இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக தவெக தலைமையின் அரசியல் செல்வாக்கை மதிப்பிடும் தேர்தலாக இதைப் பார்க்கும் அரசியல் பார்வையாளர்கள் உள்ளனர்.
விஜய்யின் வளர்ந்து வரும் அரசியல் ஆதரவை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக செயல்படுவதாகக் கூறப்படுகிறது. மறுபுறம், முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் வெளியேறிய பிறகும் தங்களது வாக்கு வங்கி உறுதியாக உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது.
திரைமறைவு வியூகங்கள் குறித்து பரபரப்பு
அரசியல் வட்டாரங்களில் பரவும் தகவல்களின்படி, தவெகவை தனிமைப்படுத்தும் நோக்கில் சில தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக இடையே மறைமுக புரிந்துணர்வு ஏற்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. தாராபுரம், பெருந்துறை மற்றும் விராலிமலை தொகுதிகளில் அதிமுகவுக்கு சாதகமான சூழல் உருவாக்கப்படலாம் என்றும், திருச்சி கிழக்கு மற்றும் மதுராந்தகத்தில் திமுகவுக்கு ஆதரவான அணுகுமுறை பின்பற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்கு வாய்ப்பு வழங்கி, பொதுவேட்பாளர் முறையில் களமிறக்கும் சாத்தியக்கூறுகளும் பேசப்படுகின்றன. எனினும், இவை அனைத்தும் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத அரசியல் தகவல்களாகவே உள்ளன.
அனைத்து தொகுதிகளிலும் களமிறங்கும் தவெக
மறுபுறம், காலியாக உள்ள அனைத்து தொகுதிகளிலும் சொந்த வேட்பாளர்களை நிறுத்த தவெக தயாராகி வருகிறது. இந்த 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், சட்டப்பேரவையில் கட்சியின் பலம் மேலும் உயரும் என்பதால் அக்கட்சி முழுவீச்சில் களப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட்டால் அதை அரசியல் ஆயுதமாக மாற்றும் திட்டத்திலும் விஜய் தரப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. “எங்களை எதிர்க்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன” என்ற பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் விஜய் தலைமையிலான தவெக தனது தேர்தல் வியூகங்களை வகுத்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: நமக்கு வேற வழியில்லை... 6 தொகுதி இடைத்தேர்தலில் திமுக - அதிமுக போட்ட ரகசிய டீல்! கசிந்த அதிர்ச்சி தகவல்..!!!