மூத்த சகோதர் மு.க முத்துவின் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி!



mk-muthu-passed-away-chief-minister-stalin-pays-homage

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நலக் குறைவால் இன்று காலமானார். வயது 77 ஆகும். கடந்த சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று காலை 8 மணியளவில் சென்னை ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் உயிரிழந்தார்.

மு.க. முத்துவின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். அவரது உடல் ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. உடனிருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தயாநிதி மாறன் எம்.பி உள்ளிட்ட அரசியல்வாதிகளும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதேபோன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி கனிமொழி ஆகியோரும் விரைவில் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவிருந்த பல நிகழ்ச்சிகள் அவரின் மரணத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மு.க. முத்து, கருணாநிதி – பத்மாவதி தம்பதியரின் மகன். அவரது தாயார் பத்மாவதி, பிரபல பாடகர் சிதம்பரம் ஜெயராமனின் சகோதரி ஆவார். 1970களில் பிள்ளையோ பிள்ளை படம் மூலம் திரையுலகில் அறிமுகமான மு.க. முத்து, பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு, இங்கும் மனிதர்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார். சில பாடல்களையும் அவர் பாடியுள்ளார்.

அப்போது அவர் எம்.ஜி.ஆருக்கு போட்டியாக திரையுலகில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டாலும், அவரது திரைப் பயணம் பெரிதாகத் தலைசிறந்ததாக ஆகவில்லை. பின்னர் அதிமுகவில் சேர்ந்த அவர், 2009ல் உடல்நலக் குறைவால் தந்தை கருணாநிதியுடன் மீண்டும் நல்லுறவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.க. முத்துவின் மறைவுக்கு திரையுலகினர், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.