சொந்த வீடு கட்டணுமா? கார் வாங்கணுமா.? கனவுகளை நனவாக்கும் சீக்ரெட் மந்திரம் இது தான்.!



saving habit is very important for survival

சேமிப்பு என்பது நம் வாழ்க்கைக்கு மிக அவசியமானது. எந்த ஒரு சிக்கலான அல்லது எதிர்பாராத சூழ்நிலையையும், நம் சேமிப்பின் மூலம் எளிதாக சமாளிக்க முடியும். திடீர் பணத் தேவைகள், பிறருக்கு உதவிகள், பள்ளிக் கட்டணம், மருத்துவச் செலவுகள் போன்ற முக்கிய தருணங்களில் நம்மை காப்பாற்றும் ஒரே ஆற்றல் நம் சேமிப்புதான்.

பெண்களுக்கு வீட்டிலேயே சேமிக்கும் பழக்கம் இருந்தால், அது நிதி சுதந்திரத்தையும், எவரையும் சாராது தேவைகளை நிறைவேற்றும் தன்னம்பிக்கையையும் வழங்குகிறது. சேமிப்பு இருந்தால் அவசர மருத்துவச் செலவுகள், வேலை இழப்பு போன்ற எதிர்பாராத சவால்களை தைரியமாக எதிர்கொள்ளலாம். வீடு கட்டுதல், திருமணம், வாகனம் வாங்குதல் போன்ற வாழ்க்கையின் முக்கிய இலக்குகளும் சேமிப்பின் மூலமே நனவாகின்றன.

சேமிப்பை ஊக்குவிக்கும் பழக்கம் சிறு வயதிலிருந்தே உருவாக வேண்டும். நம் அம்மா கடுகு டப்பாவில் பணம் சேமித்தது போல, பிள்ளைகளுக்கு உண்டியல் கொடுத்து சிறு வயதிலேயே சேமிப்பின் நன்மையை உணர்த்தலாம்.

own house

வருமானத்தைச் சரியாகப் பிரித்து அத்தியாவசிய தேவைகளுக்கு 50%, விருப்பங்களுக்காக 30%, சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்காக 20% ஒதுக்குவது சிறந்த வழிமுறை.

ஒவ்வொரு மாதமும் ஊதியம் வந்தவுடன் முதலில் செய்ய வேண்டியது சேமிப்பை ஒதுக்கிவைப்பது தான். மீதியைத்தான் இதர செலவுகளுக்கு பயன்படுத்த வேண்டும். அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் அல்லது வங்கிகளின் நிரந்தர வைப்பு (Fixed Deposit) போன்ற பாதுகாப்பான வழிகளில் சேமித்தால் நிலையான வருமானம் கிடைக்கும்.

மேலும், கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் செல்வோர் என்றால், தைரியமாக மியூச்சுவல் பண்டுகள், தங்கம், நிலம் போன்ற முதலீடுகளில் சேமிப்பை விரிவுபடுத்தலாம். இன்றைய உலகில் பணம் சம்பாதிப்பதை விட அதைச் சரியாகச் சேமித்து, புத்திசாலித்தனமாக முதலீடு செய்து, மகிழ்ச்சியாக வாழ்வதே உண்மையான சாதனை.