இந்தியா

லிப்ட் கதவுக்கு இடையில் சிக்கிய 5 வயது சிறுவன்.! பரிதாபமாக போன உயிர்.!

Summary:

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை தாராவியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் கதவுகளுக்கு இடையே 5 வயது சிறுவன் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை தாராவி சாகு நகரைச் சேர்ந்தவர் சர்பராஸ். தையல்காரராக உள்ள இவருக்கு 2 மகள்களும் சாயிக் என்ற 5 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் 4வது தளத்தில் இருந்த அவரது வீட்டிலிருந்து தரை தளத்திற்கு செல்ல 3 குழந்தைகளும் அங்கு இருந்த கிரில் லிப்டை நேற்று மதியம் பயன்படுத்தியுள்ளனர். அப்போது லிப்டிற்குள் முதலில் சென்ற சிறுமி சாயிக் வருவதற்குள் கதவை சாத்தியுள்ளார். 

5 வயது சிறுவன் சாயிக் லிப்டின் இரு கதவுகளுக்கு இடையே நின்றுகொண்டிருந்தார். இதையடுத்து லிப்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த சிறுமியும் கிரில் கதவை சாத்தியுள்ளார். இதனையடுத்து லிப்ட் தரைதளத்திற்கு நகர்ந்தது. அப்போது இடையில் சிக்கிய சிறுவன் படுகாயம் அடைந்துள்ளான். இதனையடுத்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் சிறுவனின் தந்தை. ஆனால் அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, போலீசார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்து நடந்தது விபத்து என வழக்கு பதிவு செய்துள்ளனர். பெற்றோர் கவனம் இல்லாமல் சிறுவர்களை லிப்டை இயக்கவைத்ததால் சிறுவனின் உயிர் பறிபோகும் சம்பவம் நடந்துள்ளது.


Advertisement