தினமும் நோ டிவி, நோ செல்ஃபோன்; அசத்தலான புதிய முயற்சி! அசத்தும் கிராமம்!!

தினமும் நோ டிவி, நோ செல்ஃபோன்; அசத்தலான புதிய முயற்சி! அசத்தும் கிராமம்!!



village-people-avoids-cell-phone-and-tvbin-1and-half-ho

இன்றைய காலகட்டத்தில் டிவி, செல்போன்கள் போன்றவை இல்லாமல் எவராலும் இருக்க முடிவதில்லை. குழந்தைகளும் எப்பொழுதுமே செல்போனும்,  கையுமாக உள்ளனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இருந்து மக்களை விடுவிக்க மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் அமைந்துள்ள மோஹித்யாஞ்சே வத்காவோன் என்ற கிராமத்தில் வித்தியாசமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதாவது இந்த கிராமம் சுமார் ஒன்றரை மணி நேரம் நவீன எலக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து விடுபட்டு இருக்கிறது. அதாவது தினமும் மாலை 7 மணிக்கு ஒரு சைரன் ஒலி எழுப்பப்படும். அப்பொழுது கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் டிவி, செல்போன்கள், கம்ப்யூட்டர், லேப்-டாப் உள்ளிட்ட அனைத்து சாதனங்களையும் அணைத்து விடுகின்றனர். இந்த நேரத்தில் குழந்தைகள் படிப்பது, பாடப்புத்தகங்களில் உள்ள சந்தேகங்களை கேட்பது, ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது, விளையாடுவது என இருத்தல் வேண்டும்.

மீண்டும் ஒன்றரை மணி நேரத்திற்கு பின் 8.30 மணிக்கு சைரன் ஒலி எழுப்பப்பட்டதும் அவர்கள் தங்களது செல்போன்களை ஆன் செய்துகொள்ளலாம். இதுகுறித்து கிராம பஞ்சாயத்து தலைவர் விஜய் மோஹித் தெரிவிக்கையில், கொரோனா வைரஸால் மக்கள் வீட்டிலேயே முடங்கியிருந்த நிலையில், குழந்தைகள் ஆன்லைன் வகுப்பில் பல மணிநேரமாக செல்போன்களை பயன்படுத்தி வந்தனர்.

பெற்றோரும் டிவி பார்க்கும் நேரம் நீண்டது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் மக்கள் மூழ்குவதை தடுக்கவும், நவீன உலகிலிருந்து அவர்களுக்கு விடுதலை தரவும் இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளோம் என கூறியுள்ளார்.