வலம் வரும் குதிரை லைப்ரரி.. இக்கட்டான நிலையில் கல்விக்காக போராடும் இளைஞர்.!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கன மழை பெய்ததன் காரணமாக மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அங்கே ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மழையினால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. தொலைதூரப் பகுதிகளில் இருக்கும் பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் மாணவர்களுக்கு தேவையான கல்வியை வழங்க முடியாத நிலை இருக்கிறது.
இதற்கு தீர்வு காண நினைத்த நைனிடால் பகுதியில் வசிக்கின்ற ஷுபம் பதானி என்ற நபர், 'குதிரை லைப்ரரி' ஒன்றை துவங்கி கல்வியை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்க முயற்சித்துள்ளார். சாலைகள் இல்லாத தொலைதூர பள்ளத்தாக்குகளில் புத்தகங்களை கொண்டு செல்ல குதிரைகளை பயன்படுத்துகிறார்.
ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்லும் ஷுபம் பதானி படிப்பதற்கு யாராவது தயாராக இருக்கின்ற பட்சத்தில் அவர்களுக்கு தனது குதிரை லைப்ரரியில் இருந்து புத்தகத்தை கொடுத்து படிக்க வைக்கின்றார். இதன் மூலம் சிறியவர்கள் பெரியவர்கள் என்று அனைவரும் நூல்களை எடுத்து படித்து தங்கள் அறிவை வளர்கின்றனர்.
குதிரை வைத்துள்ள சில குழந்தைகளின் பெற்றோர் அவருக்கு ஆதரவளிக்கும் விதமாக தங்கள் குதிரைகளை வாரம் ஒரு நாள் கொடுத்து அவரது முயற்சியை ஊக்குவிக்கின்றனர். இப்படி குதிரைகளில் புத்தகங்களை கொண்டு செல்வதால் குழந்தைகளுக்கும் இது படிக்கும் ஆர்வத்தை தூண்டுவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். இந்த குதிரை லைப்ரரி தற்போது பல மாவட்டங்களில் பிரபலம் அடைந்து வரும் நிலையில் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள ஷுபம் பதானுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.