இந்தியா Covid-19

இளம் கொரோனா நோயாளியை காப்பாற்ற உயிரை விட்ட முதியவர்.! குவிந்துவரும் பாராட்டுக்கள்.!

Summary:

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக தவகல்கள் வந்துகொண்டு உள்ளது. மேலும் அம்மாநிலத்தில், கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. 

அங்குள்ள பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு படுக்கை கிடைப்பது பெரும் திண்டாட்டமாக மாறி உள்ளது. இந்தநிலையில், நாக்பூரை சேர்ந்த நாராயண் தபாத்கார் என்ற
85 வயது முதியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இந்தநிலையில் அவர் கடந்த 16-ஆம் தேதி அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். ஆனால் நீண்ட போராட்டத்துக்கு பிறகு அவருக்கு அங்கு படுக்கை ஒதுக்கப்பட்டது.

அப்போது இளம்பெண் ஒருவர் கொரோனா பாதித்த தனது 40 வயது கணவருக்கு படுக்கை ஒதுக்க கோரி மருத்துவமனை நிர்வாகத்திடம் கெஞ்சியுள்ளார். இதனைப்பார்த்து கண்கலங்கிய முதியவர் நாராயண், நான் 85 வயதை கடந்துவிட்டேன். நல்லது, கெட்டதுகளை பார்த்துவிட்டேன். இந்த படுக்கை என்னைவிட இப்பெண்ணின் கணவருக்கு அதிக அவசியமாக உள்ளது. எனவே தனது படுக்கையை அந்த நபருக்கு அளிக்கும்படியும், தான் வீட்டிலேயே சிகிச்சை பெற்று கொள்வதாகவும் கூறியுள்ளார். 

வேறு வழியின்றி நாராயணனின் வேண்டுகோளை எழுத்து மூலமாக மருத்துவர்கள் பெற்றுக்கொண்டு அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமாகி அடுத்த 3 நாட்களில் அவர் உயிரிழந்தார். பிறருக்காக உயிரையே தியாகம் செய்த முதியவர் நாராயண் தபாத்கார் குறித்து சமூகவலை தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இவர் ஆர்.எஸ்.எஸ். தொண்டராக பணியாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது.


Advertisement