மே.வங்கத்தில் உயிரிழந்த இராணுவ வீரர் ஞானசேகரனின் உடல் இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்.!

மேற்குவங்கத்தில் நடந்த படைவீரர்களுக்கு இடையேயான சண்டை துப்பாக்கி சூட்டில் பலியான நாகை இராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழையூரை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 45). இவர் கடந்த 1998 ஆம் வருடம் எல்லைப்பாதுகாப்பு பணியில் இணைந்து, இராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். தற்போது, மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள முசிராபாத் 144 ஆவது பட்டாலியனில் பணியில் இருக்கிறார்.
இந்நிலையில், கடந்த 7 ஆம் தேதி மேற்கு வாங்க எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களிடையே ஏற்பட்ட துப்பாக்கி சூடு மோதல் சம்பவத்தில் ஞானசேகரன் உயிரிழந்தார். இந்த தகவல் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் கதறியழுதனர்.
ஞானசேகரனின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், இன்று அவரின் உடல் கீழையூர் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர், இராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த இராணுவ வீரர் ஞானசேகரனுக்கு ரோஸ்கில்டா என்ற மனைவி, திருச்சி தனியார் கல்லூரியில் பயின்று வரும் மகள் ஜெனிகா, 10 ஆம் வகுப்பு பயிலும் மகன் ஜெனிஸ் ஆகியோர் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்ஹிந்த்