அம்மாடியோப்... 15 மீட்டர் உயர பனிப்பாறையிலிருந்து கடலில் குதித்து சாகசம் செய்த வீராங்கனை! நீண்ட நாள் கனவு நினைவானது... வைரலாகும் திகில் வீடியோ..!!!
கனடாவின் நியூஃபவுண்ட்லாந்து பகுதியில், வட அட்லாண்டிக் கடலில் மிதந்த பிரம்மாண்டமான பனிப்பாறையிலிருந்து குதித்து கிளிஃப் டைவிங் வீராங்கனை மோலி கார்ல்சன் சாதனை படைத்துள்ளார். சுமார் 15 மீட்டர் உயரத்திலிருந்து அவர் பின்னோக்கிக் குதித்தார். ஆபத்துகள் நிறைந்த இந்தச் சாகசத்துக்காக அவர் கடந்த நான்கு ஆண்டுகளாகத் திட்டமிட்டு பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
15 மீட்டர் உயர பனிப்பாறையிலிருந்து துணிச்சலான பாய்ச்சல்
பொதுவாகப் பாறைகளிலிருந்து நீரில் குதிக்கும் கிளிஃப் டைவிங் விளையாட்டில், இந்த முறை மோலி கார்ல்சன் மிதக்கும் பனிப்பாறையைத் தேர்வு செய்தார். நியூஃபவுண்ட்லாந்து கடல் பகுதியில் தனித்து மிதந்த பிரம்மாண்டமான பனிப்பாறையிலிருந்து அவர் பின்னோக்கிக் குதித்தார்.
இதையும் படிங்க: அபூர்வ காட்சி... கடலில் நீந்தி விளையாடும் பிங்க் டால்பின்கள்..! வைரலாகும் வீடியோ...!!!
இந்தச் சாதனையின் மூலம், இத்தகைய தனித்த பனிப்பாறையிலிருந்து குதித்த முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்தச் சாகசம் தொடர்பான காணொளியும் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
நான்கு ஆண்டுகள் திட்டமிட்டு மேற்கொண்ட சாகசம்
பனிப்பாறையிலிருந்து குதிப்பது சாதாரண பாறையிலிருந்து குதிப்பதைப் போன்றதல்ல. பனிப்பாறைகள் திடீரென உடையவோ, கவிழவோ வாய்ப்புள்ளது. அதனால், உறுதியான பனிப்பாறையைத் தேர்வு செய்வது இந்த முயற்சியில் மிகப்பெரிய சவாலாக இருந்தது.
இதற்காக சுமார் நான்கு ஆண்டுகள் திட்டமிட்டு, தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. கடும் குளிரிலிருந்து உடலைப் பாதுகாக்கும் சிறப்பு உடைகளை அணிந்ததுடன், பனிப்பாறைகளில் ஏறுவதற்கான பயிற்சிகளையும் அவர் பெற்றார்.
https://www.instagram.com/reel/DezyuTkt2Gg/?utm_source=ig_web_button_share_sheet
நீண்ட நாள் கனவு நனவானதாக மோலி மகிழ்ச்சி
தனது வாழ்க்கையில் இதுவரை செய்ததிலேயே மிகவும் பயங்கரமான சாகசம் இதுதான் என்று மோலி கார்ல்சன் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாகத் திட்டமிட்டிருந்த கனவு நனவாகியுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சியின் மூலம் கனடாவின் இயற்கை அழகை உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்பதும் தனது நோக்கங்களில் ஒன்று என மோலி குறிப்பிட்டுள்ளார். ஆபத்தான சூழலில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சாகசம், கிளிஃப் டைவிங் உலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.