19 வயது இளைஞர் சித்ரவதை கொலை.. போலீஸ் ஸ்டேஷன் முன் உடல் வீச்சு..! ரௌடியின் செயலால், மாநிலமே பேரதிர்ச்சி..!!



Kerala Kottayam 19 Aged Youngster Babu Murder by Rowdy Jomon K Jose

குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்ற ரவுடி, 19 வயது இளைஞரை கொலை செய்து காவல் நிலையம் முன்பு சடலத்தை தூக்கியெறிந்து தப்பிக்க முயற்சிக்கையில் கைது செய்யப்பட்டார்.

கேரளா மாநிலத்தில் உள்ள கோட்டயத்தை சார்ந்தவர் ஜோமோன் கே ஜோஸ் (வயது 40). இவர் அப்பகுதியில் ரௌடியாக வலம் வந்துள்ளார். இதே பகுதியை சார்ந்தவர் பாபு (வயது 19). பாபு அப்பகுதியில் சமூக ஆர்வலராக செயல்பட்டு வந்துள்ளார். ரௌடியாக வலம்வந்த ஜோமோன் கே ஜோஸ், கேரள மாநிலத்தில் பல்வேறு குற்றச்செயல்களை தொடர்ந்து செய்து வந்ததால், அவரின் மீது கேரள சமூக விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து, அவரின் கூட்டாளிகள் பலரும் கைது செய்யப்பட்டனர். 

சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையான ஜோமோன் கே ஜோஸ், கோட்டயம் மாவட்டத்திற்குள் நுழைய மாவட்ட நிர்வாகம் தடைவிதித்து இருந்தது. ஆனால், தனது படைபலத்தை மீண்டும் அதிகரிக்கும் பொருட்டு ஜோமோன் கே ஜோஸ் பலரை சந்தித்து வந்தாக கூறப்படுகிறது. சமூக ஆர்வலராக செயல்பட்டு வந்த இளைஞர் பாபு, இதனை கண்காணித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வந்துள்ளார். 

இந்நிலையில், இந்த தகவல் ஜோமோன் கே ஜோஸுக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜோமோன் கே ஜோஸ், பாபுவை கொலை செய்ய திட்டமிட்டு நேற்று மதியம் ஆட்டோவில் அவரை கடத்தி சென்று சித்ரவதை செய்து கொலை செய்துள்ளார். மகன் தனது கண்முன் கடத்தி செல்லப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்த பாபுவின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அவர்கள் சரிவர விசாரணை செய்யவில்லை. 

KERALA

இப்படியான சூழலில், பாபுவை கொடூரமாக கொலை செய்த ஜோமோன் கே ஜோஸ், அவரது உடலை தோளில் சுமந்து வந்து கோட்டயம் கிழக்கு காவல் நிலையம் முன்பு வீசிவிட்டு தப்பி செல்ல முயற்சித்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், ஜோமோன் கே ஜோஸை கைது செய்தனர். அவர் கைது செய்யப்படும் போது மதுபோதையில் இருந்ததாகவும் தெரியவருகிறது. 

பாபுவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், மருத்துவர்கள் பாபுவை பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், ஜோமோன் கே ஜோஸிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோட்டயம் கிழக்கு காவல் நிலையத்திற்கு அருகில் தான் கோட்டயம் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.