சீன கப்பலை சிறைபிடித்த இந்தியா! சீன அரசு விளக்கம்!

குஜராத் அருகே, பறிமுதல் செய்யப்பட்ட சீன கப்பலில் உள்ள இயந்திரம், ராணுவத்தில் பயன்படுத்தப்படுவது இல்லை என, சீன அரசு விளக்கம் அளித்துள்ளது.
சீனாவில் இருந்து சரக்கு கப்பல் ஒன்று, பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்கு செல்லும் வழியில், குஜராத் அருகே நங்கூரமிட்டு நின்றது. அதில், தடை செய்யப்பட்ட, ஏவுகணை தயாரிப்பு சாதனங்கள் உள்ளதாக, இந்திய உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அதிகாரிகள் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டதில், அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பொருட்கள் அதில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அங்கு கைப்பற்றப்பட்ட "ஆட்டோ கிளாவ்" மூலம், 1,500 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று தாக்கக்கூடிய மிக நீண்ட தூர ஏவுகணைகளின் மோட்டாரை தயாரிக்க பயன்படுத்தலாம் மற்றும் விண்வெளி ராக்கெட்டுகள் செய்ய பயன்படுத்தலாம் என தெரிவித்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை சீன மறுத்துள்ளது.