இந்தியா

பாவம் சார் அந்த மனுஷன்..! வியாபாரியின் தள்ளுவண்டியை கவிழ்த்த போலீஸ்..! வைரல் வீடியோ..!

அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி சாலையில் தள்ளுவண்டி கடைபோட்டிருந்த நபர் ஒருவரின் தள்ளுவண்டியை காவல்துறை அதிகாரி சாலையில் தலைகுப்புற தள்ளிவிட்ட வீடியோ காட்சிகள் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

கொரோனா காரணமாக நாடுமுழுவதும் கடும் உத்தரவு அமலில் உள்ளது. பல்வேறு தொழில்கள் மற்றும் செயல்முறைகளுக்கு அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது. அந்த வகையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடை போட்டதாக கூறி மக்கா சோளம் விற்கும் வியாபாரி ஒருவரின் தள்ளுவண்டியை போலீஸ் உதவி ஆய்வாளர் சாலையில் தலைகுப்புற கவிழ்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோ காட்சியில், சாலை ஓரம் நிற்கும் தள்ளுவண்டி அருகில் வரும் உதவி ஆய்வாளர் முதலில் வண்டியில் இருந்த மக்கா சோளத்தை எடுத்து சாலையில் வீசுகிறார். பின்னர் வண்டியை தள்ளிவிட்டு அனைத்து மக்கா சோளத்தையும் கீழே தள்ளுகிறார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த ஒருவரால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் குறிப்பிட்ட காவல்துறை அதிகாரிக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஷிவ்பூர் என்ற இடத்தில் நடந்த இந்த சம்பவத்தில் உதவி ஆய்வாளர் வருண் குமார் ஷாஷி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு அவர் மீது விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது..

சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபரிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்ததோடு, அந்த நபருக்கு  இழப்பீட்டு தொகையையும் அளித்தனர்.


Advertisement