தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா..! மீண்டும் அமலாகுமா ஊரடங்கு?..! மத்திய சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை..!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மூன்று வருடங்களாக கொரோனா வைரஸ் தொற்று பல நாடுகளில் பரவி வரும் நிலையில், சில மாதங்களாக இந்தியாவில் கட்டுக்குள் இருந்துவந்தது.
ஆனால் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்குமாறு தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் சுகாதாரதுறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.அவர் கூறியதாவது, "மாநில மற்றும் மத்திய அரசுகள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளால் கடந்த மூன்று மாதங்களாக இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்திருந்தது.
இருப்பினும் ஒரு வாரமாக தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில், கடந்த வாரம் 0.53 சதவீதமாக இருந்த நோய் பரவல் விகிதம் தற்போது 0.73 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதற்கு சில மாநிலங்களில் கொரோனா மீண்டும் தீயாக பரவி வருவதே காரணமாகும். குறிப்பாக தமிழகத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு வாரமாக பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது வருத்தமளிக்கிறது என்றார். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பலன்கள் தற்போது மீண்டும் கொரோனா பரவுவதால் வீணாகிவிடக்கூடாது.
நாட்டின் மொத்த பாதிப்பில் தமிழகத்தில் 3.13 சதவீதம் அதிகமாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடுப்பூசி செலுத்துதல், பரிசோதனைகளை தீவிரப்படுத்த, நோய் தடுப்பு விதிகளை முழுமையாக கடைப்பிடித்தல் போன்ற பலநிலைகளில் தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
இதனை தவிர கொரினாவை முறையாக கண்காணிப்பதுடன் மாதிரிகளை ஆய்வு செய்வது மிகவும் முக்கியம். மாநில அரசுகள் கொரோனா விவகாரத்தில் கண்காணிப்பையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொண்டால் உறுதியாக கட்டுப்படுத்த இயலும்" என்று எழுதியுள்ளார்.