ஒரு இளைஞர் மூலம் ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சி தகவல்!

ஒரு இளைஞர் மூலம் ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சி தகவல்!


23 people affected corona in one family

பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதும், ஓமன் நாட்டில் இருந்து திரும்பிய ஒரு இளைஞர் மூலம் இது பரவி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் ஆரம்பித்து உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,000-க்கும் அதிகமாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 239 ஆகவும் உள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார் பிரதமர் மோடி. ஊரடங்கு அமலுக்கு வந்ததில் இருந்து கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கியது.  டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களால் கொரோனா பரவல் சற்று அதிகரிக்க தொடங்கியது.

பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் ராகனாத்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 900 வீடுகள் இருக்கின்றன. அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி ஓமன் நாட்டில் இருந்து ஊருக்கு வந்துள்ளார். குடும்பத்தினருடன் சகஜமாக, பழகியதுடன், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளிலும் ஆர்வம்காட்டி வந்துள்ளார்.

corona
திடீரென அந்த நபருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதிசெய்தனர். இதனையடுத்து அவருடைய குடும்பத்தினர் அனைவரையும் மருத்துவமனையில் அனுமதித்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.

அப்போது அவரது குடும்பத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 22 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டறியப்பட்டது. ஓமன் நாட்டில் இருந்து திரும்பிய அந்த இளைஞர் மூலம்தான் அது பரவியதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இதனை அடுத்து அந்தக் கிராமம் ‘சீல்’ வைக்கப்பட்டது. அங்கு கிராம மக்களை வீட்டைவிட்டு வெளியே வரவிடாமல் தடுக்க ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.