கேரளாவில் நிலச்சரிவில் 85 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர்! அதில் 52 பேர் மாயம்!



10 people died in kerala landslide

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.மாநிலத்தின் முக்கிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதுடன், மலைப்பிரதேசங்களில் நிலச்சரிவு மற்றும் பெருவெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால், மாநிலத்தின் பல இடங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிலாம்பூர் பகுதியில் தொடர் கனமழையால் தண்ணீர் பெருக்கெடுத்து, தெருக்களில் தேங்கி நிற்கிறது. இந்நிலையில், இன்று அதிகாலை, ராஜமலை அருகே உள்ள பெட்டிமுடி என்கிற பகுதியில் அமைந்துள்ள தேயிலை எஸ்ட்டேட் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, எஸ்டேட் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்புகள் மண்ணில் சரிந்தன.

அங்கு நிலச்சரிவு ஏற்பட்டதில் சுமார் 30 குடும்பங்கள் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது. இதில், வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த பலர் இறந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு இருந்த குடியிருப்புகளில் சுமார் 85 பேர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் மொத்தமாக மண்ணுக்குள் புதைந்துள்ளதாக உள்ளூர் மக்கள் கடும் சோகத்துடன் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்களில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதுவரை 16 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். 52 பேரை காணவில்லை. இதனால் உயிரிழப்பு அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.