பெண்களே உஷார்.. வயதான காலங்களில் பெரும் பாதிப்பாகும் எலும்புப்புரை பிரச்சனை.!

வயது அதிகரித்து கம்பூன்றி நடக்கும் நிலையில் உள்ள பெண்கள், அந்த காலகட்டங்களில் திடீரென வழுக்கி கீழே விழுந்து விலா எலும்பு பாதிப்பால் அவதிப்படுவதை நாம் கண்டிருப்போம். நம்மை இளவயதில் தூக்கி வளர்த்த பாட்டிகள், வயதான பின்னர் நாம் தெரியாமல் அவர்களின் கால்களை மிதித்துவிட்டால் கூட கத்தி களேபரம் செய்து ஊரையே கூட்டிவிடுவார்கள். இதில், கட்டையில் போறவன் மிதிச்சிட்டானே, **யை குடிக்கி பாத்து வாடா படவா என பாசமாக திட்டி வலியால் கண்ணீர் விடாமல் அதனை சமாளித்து இருப்பார்கள். வயோதிக நிலையில் உள்ள பாட்டிகள் வீடுகளில் இருந்தால் பல கூத்துக்கள் இன்னும் அரங்கேறும்.
இவ்வாறாக கீழே விழுந்து இடுப்பை ஒடித்துக்கொள்ளும் பாட்டிகளுக்கு எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும். உண்மையில், இவ்வாறான நிகழ்வுகளில் பெரும்பாலானவைக்கு எலும்புப்புரை நோய் காரணமாக அமைகிறது. இதனை கவனிக்காத பட்சத்தில் அடிக்கடி பாட்டி எதிர்பாராமல் கீழே விழும் பட்சத்தில் உயிரிழப்பும் ஏற்படலாம். குழந்தை பருவங்களில் மென்மையுடன் இருக்கும் எலும்பு வயது கூடும் போது எலும்பு வலுப்பெற தொடங்குகிறது. பின்னர், வயதாகும் போது அந்த எலும்பு தனது வலுவை இழக்கிறது. இதில், எலும்பு நொறுங்கும் தன்மையை எலும்புப்புரை என்று அழைக்கிறார்கள்.
எலும்புப்புரை நோய் அனைவரும் ஏற்படாது என்றாலும், அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்நோய் இருப்பது தெரியாது அல்லது உணர இயலாது. இதுவே இதனை ஆபத்தான நோயாக மாற்றுகிறது. மனிதர்களை பலவீனமடைய செய்யும் நோய்களில் முக்கியமானதாக எலும்புப்புரை உள்ளது. முதுமையான காலங்களில் எலும்பு பலவீனமாகி முறியும் அபாயத்தை கொண்டுள்ளது. சில நேரத்தில் இதுவே வயதானவர்களின் இறப்புக்கு வழிவகை செய்கிறது. இந்த பிரச்சனையை முன்கூட்டியே கவனிக்காத பட்சத்தில், மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.
எலும்புப்புரைநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் நின்ற 10 வருடத்திற்கு பின்னர் மணிக்கட்டு முறிவு ஏற்படும். மாதவிடாய் நின்ற 20 வருடத்தில் முதுகெலும்பு முறியும். சில நேரங்களில் பெண்களுக்கு 75 வயதுக்கு பின்னரும் எலும்பு முறிவு ஏற்படலாம். ஆண்களும் - பெண்களும் 30 வயதில் எலும்பு திண்மை உச்சத்தை அடைந்த பின்னர், எலும்பு திண்மையை இழக்க தொடங்குகின்றனர். பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்ததுடன் அவை தொடர்பில் இருப்பதால், எலும்பு திண்மை பிரச்சனை ஆண்களை விட பெண்களுக்கு அதிகம்.
மாதவிடாய் சுழற்சி நின்ற 5 முதல் 7 வருடத்தில் எலும்புத்திண்மையை 12 % பெண்கள் இழக்கின்றனர். மேலும், மாதவிடாய் நிறுத்தத்துக்கு முன்னர் ஏற்படும் ஈஸ்டிரோஜன் குறைபாடு எலும்புப்புரை நோய்க்கு காரணமாக அமைகிறது என்றும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.