நடிகை காஜல் அகர்வாலை சந்திப்பதற்காக ரூ.60 லட்சத்தை இழந்த வாலிபர்! இணையவாசிகளே யாரும் மாட்டிக்காதீங்க!!

ராமநாதபுரத்தை சேர்ந்த பெரும் தொழிலதிபரின் மகனான 27 வயது வாலிபர் ஒருவர், கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு இணையதளத்தில் நடிகைகளின் கவர்ச்சி படங்களுடன், நீங்கள் விரும்பும் நடிகைகளை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததை கண்டுள்ளார்.
உடனே அந்த வாலிபர் அந்த இணையதள பக்கத்திற்குள் சென்று தனது விவரங்களை பதிவு செய்துள்ளார். மேலும் தனது செல்போன் நம்பரையும் அவர் பதிவு செய்துள்ளார். பின்னர் சில நிமிடங்களிலேயே எந்த நடிகையை சந்திக்க வேண்டும் என்ற தகவல் கேட்கப்பட்டுள்ளது.
உடனே அந்த வாலிபர் நடிகை காஜல் அகர்வாலை சந்திக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். உடனே ரூ.50 ஆயிரம் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. அந்த வாலிபரும் ஆர்வத்தில் தனது வங்கி கணக்கு மூலம் பணத்தினை செலுத்தியுள்ளார். பின்னர் காஜலை சந்திக்கலாம், வீட்டிற்கு அழைத்து வரலாம் என பெரும் கனவோடு இருந்துள்ளார் அந்த வாலிபர் .
இதற்கிடையே அந்த வாலிபரிடமிருந்து ரூ.50 ஆயிரத்தை பெற்றவர்கள் அவர் பெரும் பணக்காரர் என தெரிந்துகொண்டு அவரிடம் மேலும் பணம் பறிக்க முடிவு செய்து, மேலும் கொஞ்சம் பணம் செலுத்தினால் உடனே நடிகை காஜல் அகர்வாலை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தகவல் அனுப்பியுள்ளனர். ஆனால், உண்மையை உணர்ந்த அந்த வாலிபர்,உஷாராகி பணம் அனுப்ப முடியாது என மறுத்துள்ளார்.
அதனை தொடர்ந்து அந்த வாலிபரின் செல்போனிற்கு அவரையும் சில பெண்கள் மற்றும் நடிகைகளை இணைத்து ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்ட புகைபடங்களையும், வீடியோக்களையும் அவர்கள் அனுப்பியுள்ளனர்.மேலும் தாங்கள் கேட்கும் பணத்தை அனுப்பாவிட்டால் இவை அனைத்தையும் உனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பிவிடுவேன் என மிரட்டி 3 தவணையாக 60 லட்சம் பணம் பறித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த அந்த வாலிபர் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து, யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் அதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் அவர் காணாமல் போனது குறித்து புகார் அளித்த நிலையில், தீவிர தேடுதலில் ஈடுபட்ட அவர்கள் கொல்கத்தாவில் அந்த வாலிபரை கண்டறிந்துள்ளனர். பின்னர் அவரிடம் விசாரணை செய்து நடந்த உண்மைகளையும் கண்டறிந்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் ஏமாற்று வேலையில் ஈடுபட்டது சினிமா தயாரிப்பாளரான சரவணகுமார் என கண்டறிந்து அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.