'உங்கள் தம்பி அழுகிறேன்'.. விஜயகாந்த் உடல்நலம் குறித்து உருக்கமாக அறிக்கை வெளியிட்ட மன்சூர் அலிகான்.!

'உங்கள் தம்பி அழுகிறேன்'.. விஜயகாந்த் உடல்நலம் குறித்து உருக்கமாக அறிக்கை வெளியிட்ட மன்சூர் அலிகான்.!



Manzoor Ali Khan statement about vijayakanth

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தேமுதிக அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சளி மற்றும் இருமல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே விஜயகாந்தின் உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியாகியது. இதனையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் விஜயகாந்த் குணமடைந்து மீண்டு வர வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

vijayakanth

அந்த வகையில் விஜயகாந்த் குணமடைந்து மீண்டு வர வேண்டும் என பிரபல நடிகரான மன்சூர் அலிகான் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், "அண்ணே! தாங்களுக்கு ஏன் இந்த சோதனை.? உங்கள் மன்சூரலிகான் அழுகிறேன். நன்றாகி வாங்கண்ணே!! கேப்டன் நடனக்காரனான என்னை நாடறியச்செய்த திருமலை நாயக்க நாயகனே! எதிர்நாயகனை அடிக்கவே விடாது, பில்டப் செய்தும் டூப் போட்டும் சூப்பர்மேனாய் கதாநாயகர்கள் வலம் வந்த காலத்தில், திருப்பி அடி, பறந்து அடி, என தாங்களை உதைக்க வைத்து, திருப்பி காற்றிலே பறந்து ஒரு கழுதை உதை உதைப்பீர்களே! அண்ணே! இனி எப்ப வந்து உதைப்பீர்கள்? 

மதுரை மீனாட்சி அம்மன் தூண்கள் போன்று இருக்கும் கால்கள் மெலிந்ததேனோ மன்னவனே! நாயகிகளை, துரத்த வைத்து, கடத்த வைத்து, சில்மிஷம் செய்ய வைத்து. ஓடி, ஆடி ... உழைப்பை பிழிய வைத்தவனே! சாப்பிடுகிற சோறு உடம்பில் ஒட்ட வைத்தவனே! நீவீர் வாழ்வீர் நூறாண்டு. 

vijayakanth

யாரோ தவறாக வீடியோவை கட் செய்து அனுப்பிவிட்டனர் கடவுளிடம். தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இங்குள்ளனர் நிறைய. கருப்பு எம்.ஜி.ஆரே. ஆயிரக்கணக்கானரை வாழவைத்த ஆலவிருட்சமே! மக்களோடுதான் கூட்டணி என்றாய் ! மகராசி அம்மாவுடன் கூட்டணி வைத்து எதிர்கட்சி தலைவரானாய் ! மகராசியை மரணிக்கச் செய்துவிட்டனர். 

எங்கள் மாநகர காவலனை, பூந்தோட்ட காவல்காரனை. வேதனைக்கு உள்ளாக்காதீர் இறைவா. இன்னல்களை இலகுவாக்கு !! கேப்டனை மருத்துவத்தில் மீட்டு புரட்சிக் கலைஞராய் ஒப்படை! நண்பன் ராவுத்தருக்காக தர்கா சென்றவரை, அவரின் ரசிக, ரசிகையர் பக்தர்களுக்காக பத்திரமாக தா ...100வது படம் எந்த நாயகர்களுக்கும் ஓடியதில்லை: தாங்களது 100வது படத்தில் முதல் வாய்ப்பளித்து வெற்றி திருமகளை மாலையிட வைத்த பிரபாகரனே...வாழிய வாழிய நூறாண்டு '!! தாங்களிடம் அடிவாங்க காத்திருக்கும் தம்பி மன்சூரலிகான்! என கண்ணீருடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.