காதல் – உறவுகள் 18 Plus

எய்ட்ஸ் என்றால் என்ன? எப்படி பரவுகிறது? தவிர்ப்பது எப்படி?.. எய்ட்ஸ் உள்ள பெண் கர்ப்பமாகலாமா?.!

Summary:

டிசம்பர் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய நாளில் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை பெறுவோம்.

டிசம்பர் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய நாளில் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை பெறுவோம்.

எய்ட்ஸ் நோய் என்பது பல நோய்களின் கூட்டுத்தொகுப்பு ஆகும். இது உயிர்கொல்லி நோயாக இருப்பதால், குணப்படுத்துவது கடினம். ஆனால், ஏ.ஆர்.டி கூட்டு மருந்து வாயிலாக வாழ்நாளை நீட்டிக்க வழிவகை செய்யலாம். 

எய்ட்ஸ் : 

Acquired Immune Deficiency Syndrome என்பதே AIDS-ன் விரிவாக்கம் ஆகும். ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவர் பெற்றுக்கொள்வது (A), உடலின் நோயெதிர்ப்பு சக்தி குறைவது (I), குறைந்துவிடுவது (D), பல நோயகளின் கூட்டு தொகுப்பு (S) என்பது அதன் தமிழாக்கம் ஆகும். 

இந்நோயானது கடந்த 1981 ஆம் வருடம் கண்டறியப்பட்டது. வட, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் ஆசிய கண்டங்களில் வெகுவாக பரவி வருகிறது. கடந்த 1986 ஆம் வருடத்திலேயே எய்ட்ஸ் நோய் அறிகுறி உள்ளவர்கள் என சென்னையில் எய்ட்ஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், அன்றைய நாளில் அது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை தந்தது.

நமது நாட்டில் தற்போது வரை எய்ட்ஸ் நோயினால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு நிலவரத்தில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளதாக கடந்த 2 வருடத்திற்கு முந்தைய ஆய்வறிக்கைகள் தெரிவிக்கிறது. 

எய்ட்ஸ் நோய் காரணம் : 

எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் கிருமியின் பெயர் எச்.ஐ.வி. இந்த எச்.ஐ.வி கிருமியானது உடலில் புகுந்துவிடும் பட்சத்தில், உடல் இயல்பாக பெற்றுள்ள நோயெதிர்ப்பு சக்தி அழிக்கப்படுகிறது. நோய் எதிரிப்பு ஆற்றல் குறைவதால் காசநோய், புற்றுநோய், மூளைக்காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிற நோய்கள் ஏற்பட்டு மனிதனுக்கு மரணம் ஏற்படுகிறது. 

எய்ட்ஸ் அறிகுறிகள் : 

இந்நோயின் அறிகுறியாக உடல் எடை விரைந்து குறைவது, ஒரு மாதத்திற்கும் அதிகமான காய்ச்சல், தொடர் இருமல், வயிற்றுப்போக்கு, உடல் அரிப்புடன் ஏற்படும் தோல்வியாதி போன்றவை உள்ளது. எய்ட்ஸ் நோயை கண்டறிவதற்கு இரத்தப்பரிசோதனை செய்வது நல்லது. 

எய்ட்ஸ் பரவும் விதம் : 

இந்த நோய்க்கான கிருமி உடலில் இருக்கும் இரத்தம், விந்து, பெண்ணுறுப்பு திரவம், தாய்ப்பால் போன்ற பகுதிகளில் அதிகளவு வாழ்கிறது. தாம்பத்தியம் வைத்துக்கொள்ளும் இரண்டு நபர்களில் ஒருவருக்கு எய்ட்ஸ் இருந்தால், அவருடன் பாதுகாப்பற்ற முறையில் தாம்பத்தியம் மேற்கொள்பவருக்கும் எய்ட்ஸ் ஏற்படும். 

எய்ட்ஸ் நோய் இருக்கும் நபருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசியை மற்றொரு நோயாளிகளுக்கு பயன்படுத்துவதாலும், எய்ட்ஸ் நோயுள்ள நபரின் இரத்தத்தை மற்றொருவருக்கு சோதனை இல்லாமல் செலுத்துவது, தாயிடம் இருந்தும் கருவில் உள்ள குழந்தைக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்படுவது என்றும் எச்.ஐ.வி பரவுகிறது. இந்த நோய்க்கு மருந்து இல்லை. 

எய்ட்ஸ் வராமல் தடுக்க தடுப்பூசியும் இல்லாத நிலையில், ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது சாலச்சிறந்தது. இந்நோயில் இருந்து நம்மையும், பிறரையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தாம்பத்தியத்தின் போது குறைந்தளவு ஆணுறை என்ற காண்டத்தை உபயோகம் செய்வது நல்லது. 

நமது முன்னோர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நடைமுறையை நம்மிடையே பகிர்ந்து சென்றது, பால்வினை நோய்களை அவர்கள் முன்னதாகவே அறிந்திருந்ததால் தான். இன்றுள்ள நடைமுறையில் மறுமணம் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும், உடலுறவில் பாதுகாப்பு என்பது முக்கியம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். 

எய்ட்ஸ் நோய்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளவர்கள் : 

பால்வினை நோய்தொற்றுக்கு ஆளான நபர்கள், பிறப்புறுப்பில் புண்கள் உள்ளவர்கள், பல நபர்களுடன் உடலுறவு கொள்பவர்கள், பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்பவர்கள், போதை பொருள் உபயோகம் செய்பவர்களுக்கு எய்ட்ஸ் நோய் அதிகளவு ஏற்படும் அபாயம் உள்ளது. 

தடுப்பது எப்படி ? : 

ஒருவனுக்கு ஒருத்தி என்ற நடைமுறையில் வாழ்வது, தகாத அல்லது கள்ளக்காதல் உறவுகளை தவிர்ப்பது அல்லது ஈடுபடாமல் இருப்பது, ஓரின சேர்க்கையில் ஈடுபடாமல் இருப்பது, தொற்றுநோய் நீக்கம் செய்யப்பட்ட ஊசியை பயன்படுத்துவது, இரத்த தானத்தின் போது எய்ட்ஸ் பரிசோதனை செய்த இரத்தத்தை தானமாக பெறுவது மூலமாக எய்ட்ஸ் நோய் வருவதை தடுக்கலாம். 

பரிசோதனை மையம் : 

நமது மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனையில் ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்தல் மற்றும் பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இரத்த பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது. மேலும், ஆலோசனை விபரமும், பரிசோதனை முடிவும் இரகசியம் காக்கப்படும். பரிசோதனையின் முடிவில் எய்ட்ஸ் உறுதியாகும் பட்சத்தில், தொடர் சிகிச்சை மற்றும் மனநல சிகிச்சை வழங்கப்படும். 

எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள், எச்.ஐ.வி இல்லா குழந்தையை பெற முடியுமா?. : 

எச்.ஐ.வி நோயின் தாக்கத்திற்கு உள்ளாகிய பெண்கள், எச்.ஐ.வி இல்லாத குழந்தையை கட்டாயம் பெற்றெடுக்க முடியும். கர்ப்பிணி பெண்கள் பிரசவ வலி ஏற்பட்டதும் நெவிரைப்பின் மாத்திரை கொடுப்பார்கள். குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் எடைக்கு தகுந்தாற் போல, கிலோவுக்கு 2 மி.கி அளவு நெவிப்ரன் மாத்திரை கொடுப்பார்கள். இதனால் தாயிடம் இருந்து எச்.ஐ.வி பரவுவதை தடுக்கலாம். அதற்கான ஆலோசனையும் மருத்துவர்களால் வழங்கப்படும். 

டிசம்பர் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்ட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இன்றைய நாளில் அதற்கான விழிப்புணர்வை தாய், தந்தை, அக்கா, தம்பி, நண்பர்கள், சொந்தங்கள், மருத்துவர், சமூக ஆர்வலர் என்ற முறையில் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். எய்ட்ஸ் இல் இருந்து அனைவரையும் பாதுகாப்போம்.


Advertisement