உலகம்

சிறை வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. 38 கைதிகள் உடல் கருகி மரணம்.! 69 பேர் படுகாயம்.!!

Summary:

சிறை வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. 38 கைதிகள் உடல் கருகி மரணம்.! 69 பேர் படுகாயம்.!!

கிடேகா சிறை வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 38 கைதிகள் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். 69 பேர் காயமடைந்துள்ள நிலையில், இவர்களில் 34 கைதிகள் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள புரூண்டி நாட்டின் மத்திய பகுதியில் கிடேகா மாகாணம் உள்ளது. இம்மாகாணத்தின் தலைநகர் கிடேகாவில் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலை 400 கைதிகள் தங்கவைக்கப்படும் அளவில் கட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது 1,500 க்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 2015 ஆம் வருடத்தில் அன்றைய அதிபர் பியர் நுகுறுஞ்சிசா ஆட்சியை கவிழ்க்க முயற்சித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 100 க்கும் மேற்பட்ட கைதிகளையும் இதே சிறையில் அடைத்து வைத்துள்ளனர். நேற்று முன்தினம் காலை நேரத்தில் சிறைவளாகத்தில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.

தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், சிறைச்சாலை முழுவதிலும் தீ பற்றி எரிந்துள்ளது. இதனால் கைதிகள் அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்த நிலையில், சிறைக்காவலர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், தீ கட்டுக்கடங்காமல் கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. 

தீயணைப்பு படை வீரர்களும் சிறை வளாகத்திற்கு வந்து, நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மீட்பு பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள் 38 பேரின் சடலத்தை மீட்டுள்ளனர். இவர்களின் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 

மேலும், 69 கைதிகளுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்ட நிலையில், இவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த 69 கைதிகளில் 34 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவருகிறது. மின்கசிவு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என தெரியவரும் நிலையில், விபத்து குறித்து விசாரணை நடத்த அந்நாட்டின் துணை அதிபர் புரோஸ்பர் பசோம்பன்சா உத்தரவிட்டுள்ளார்.


Advertisement