இந்த தப்பை மட்டும் இந்தியா ஒருபோதும் செய்யாது! அமெரிக்க போர் விமானங்களை வாங்காததற்கு காரணம் இதுதான்!!!
உலக அரசியலில் பாதுகாப்பு கூட்டணிகள் மாறிக்கொண்டிருக்கும் சூழலில், பல முன்னணி நாடுகள் அமெரிக்க ஆயுதங்களை நம்பி செயல்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியா தனது பாதுகாப்பு கொள்கையில் தனித்துவமான பாதையைத் தேர்வு செய்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் பல அதிநவீன போர் விமானங்கள் விற்பனைக்கு முன்வந்தபோதும், இந்தியா அவற்றை திட்டமிட்டு மறுத்தது என்பது பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் விவாதமாகியுள்ளது.
ஈரான் வான்பரப்பில் அமெரிக்க விமானங்கள்
ஈரான் வான்பரப்பை சுற்றி அமெரிக்காவின் அணுசக்தி விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து புறப்படும் F/A-18 சூப்பர் ஹார்னெட்டுகள், F-15E ஸ்டிரைக் ஈகிள்ஸ், F-16 போர் விமானங்கள் மற்றும் முதன்முறையாக போர்க்களத்தில் இறங்கியுள்ள F-35 ஸ்டீல்த் விமானங்கள் என மாபெரும் வான்வழிப் படை ஒத்திகை நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் இந்த அனைத்து வகை போர் விமானங்களும் கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா முன்மொழிந்தவையாகும்.
பனிப்போர் கால வரலாறு
இந்தியாவின் மறுப்பிற்கு பின்னால் நீண்ட அரசியல் மற்றும் பாதுகாப்பு வரலாறு உள்ளது. பனிப்போர் காலத்தில் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அதிநவீன F-16 விமானங்களை வழங்கியது. அவை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டன. இதனால் இந்தியா அன்றைய சோவியத் யூனியன் பக்கம் சாய்ந்து, மிக்-21 முதல் சுகோய்-30 வரை ரஷ்ய போர் விமானங்கள் இந்திய வான்படையின் முதுகெலும்பாக மாறின.
1998 அணு சோதனை மற்றும் அமெரிக்க தடை
1998-ஆம் ஆண்டு இந்தியா அணு ஆயுதச் சோதனை செய்தபோது, அமெரிக்கா உடனடியாக பல தொழில்நுட்ப தடைகளை விதித்தது. இந்த அனுபவம் இந்திய பாதுகாப்பு அமைப்புகளில் ஆழமான சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின்னர் இரு நாடுகளின் உறவு மேம்பட்டாலும், பாதுகாப்பு துறையில் முழு நம்பிக்கை உருவாகவில்லை.
போர் விமானங்களில் தன்னாட்சி முக்கியம்
இந்தியா அமெரிக்காவிடமிருந்து சி-17 போக்குவரத்து விமானங்கள், அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் மற்றும் பிரிடேட்டர் ட்ரோன்கள் போன்ற ஆயுதங்களை வாங்கியுள்ளது. ஆனால் முக்கியமான போர் விமானங்களை வாங்குவதில் தயக்கம் காட்டுகிறது. காரணம் தன்னாட்சி அதிகாரம். அமெரிக்க போர் விமானங்களை பயன்படுத்துவதற்கு அதன் உதிரிபாகங்கள், மென்பொருள் மேம்படுத்தல்கள் மற்றும் செயல்பாட்டில் அமெரிக்க அனுமதி அவசியமாகும். துருக்கி மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் அனுபவங்கள் இதற்குச் சான்றாக பார்க்கப்படுகின்றன.
பாலக்கோட் தாக்குதல் மற்றும் ரஃபேல்
2019 பாலக்கோட் தாக்குதலின் போது, பாகிஸ்தானின் F-16 விமானத்தை இந்தியாவின் பழைய மிக்-21 சுட்டு வீழ்த்தியது. இது தொழில்நுட்பத்தை விட யுத்த உத்திகள் முக்கியம் என்பதை வெளிப்படுத்தியது. இதே காரணத்தால் இந்தியா பிரான்சின் ரஃபேல் விமானங்களை தேர்வு செய்தது. பிரான்ஸ் இந்தியாவிற்கு எந்த அரசியல் நிபந்தனைகளையும் விதிக்காமல் ஆயுத ஒப்பந்தங்களை வழங்குவது முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
தற்போது அமெரிக்கா தனது மிக முன்னேற்றமான F-35 விமானங்களை இந்தியாவிற்கு வழங்க தயாராக இருந்தாலும், இந்தியா ரஷ்யாவின் Su-57 ஸ்டீல்த் விமானங்களை வாங்கும் வாய்ப்பை ஆராய்ந்து வருகிறது. இது இந்தியாவின் பாதுகாப்பு கொள்கை தெளிவாக ஒன்றையே கூறுகிறது – நாட்டின் வான்பரப்பின் கட்டுப்பாடு முழுமையாக இந்தியாவின் கையிலேயே இருக்க வேண்டும்.