கோமாவிலிருந்து கண் விழித்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி! என்ன ஒரு பித்தலாட்டம்.... கடைசியில் தோழி மூலம் அம்பலமான உண்மை...!!!
அமெரிக்காவில் கோமாவில் இருந்து மீண்ட இளம் பெண்ணை ஏமாற்ற முயன்ற நபரின் அதிர்ச்சி செயல் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நினைவிழப்பு காரணமாக பலவீனமான நிலையில் இருந்த பெண்ணை தனது காதலியாக நம்பவைக்க முயன்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த புரூக் நைஸ்லி கடந்த 2015ஆம் ஆண்டு சுமார் 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து கடுமையான விபத்துக்குள்ளானார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் 10 நாட்கள் கோமா நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
கோமாவிலிருந்து மீண்டபின் ஏற்பட்ட குழப்பம்
மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு புரூக் மெதுவாக நினைவு திரும்பத் தொடங்கினார். ஆனால் விபத்தின் தாக்கத்தால் அவரது நினைவாற்றல், பார்வை மற்றும் உடல் சமநிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. பல பழைய நினைவுகள் தெளிவாக இல்லாத சூழ்நிலையும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த நேரத்தில் மருத்துவமனைக்கு வந்த ஒருவர், தன்னை புரூக்கின் காதலன் என அறிமுகப்படுத்திக் கொண்டார். லேசான ஞாபக மறதி இருந்ததால், புரூக்கால் அவரது கூற்றை உடனடியாக மறுக்க முடியவில்லை.
இதையடுத்து, அவர் குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் தன்னை புரூக்கின் நெருங்கியவர் என நம்பவைக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் புரூக்கின் உடல்நிலையை விட, அவர் எப்போதும் அலங்காரமாக இருக்க வேண்டும் என்பதில் மட்டுமே அந்த நபர் அதிக அக்கறை காட்டியது புரூக்கிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
தோழி மூலம் வெளிவந்த உண்மை
சில நாட்களுக்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து திரும்பிய புரூக்கின் நெருங்கிய தோழி, அந்த நபரை பார்த்தவுடனேயே அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம், ஒரு வருடத்திற்கு முன்பு தன்னிடம் Sexual Harassment செய்ததாக புகார் அளித்த அதே நபர் இவர்தான் என்று அவர் தெரிவித்தார்.
இதனால் புரூக்கிற்கு மெல்ல பழைய நினைவுகள் திரும்பியதோடு, தன்னை ஏமாற்ற முயற்சி நடந்ததை அவர் உணர்ந்தார். மேலும், புரூக் கோமாவில் இருந்தபோது அவரது உடல்நிலை மோசமடைந்தால் ‘லைஃப் சப்போர்ட்’ கருவியை அகற்றிவிடுமாறு அந்த நபர் அவரது தாயிடம் கூறியிருந்ததும் பின்னர் தெரியவந்தது.
தொடர்பை முற்றிலும் துண்டித்த புரூக்
உண்மை தெரியவந்ததும், புரூக் உடனடியாக அந்த நபருடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்தார். பின்னர் தனது வாழ்க்கையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.