தக்கலை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை..!

தக்கலை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை..!


young-woman-commits-suicide-by-hanging-near-thakkalai

தக்கலை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள சரல் விளையை சேர்ந்தவர் செல்வின் சுனில்ராஜ் (35). டெம்போ டிரைவர். இவரது மனைவி அஜிதா(26) பட்டதாரி. இவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்களாகியும் குழந்தை இல்லை.

சுனில் ராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தவர் வாடகைக்கு டெம்போ ஓட்டி வருகிறார். இவருக்கும் மனைவிக்குமிடையே அடிக்கடி சண்டை நடப்பது வழக்கமாக இருந்துள்ளது. நேற்று இரவு வழக்கம்போல் இருவருக்குமிடையே சண்டை நடந்துள்ளது.

இந்த நிலையில் நேஏறு காலை வெளியில் சென்ற சுனில் ராஜ் சுமார்  8 மணியளவில் மனைவியை செல்போனில் அழைத்துள்ளார். அப்போது அழைப்பை எடுக்கவில்லை. தொடர்ந்து பலமுறை முயற்சித்தும் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த சுனில்ராஜ் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் அஜிதா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதனையடுத்து அருகில் உள்ளவர்களின் உதவியுடன் அஜிதாவை தூக்கில் இருந்து கீழே இறக்கி தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அஜிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தக்கலை துணை சூப்பிரண்ட் கணேசன் சம்பவ இடத்திற்கு  வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் திருமணமாகி நான்கு வருடமே ஆகியுள்ளதால் பத்மனாபபுரம் ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டார்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து அஜிதாவின் தந்தை பால்ராஜ் தக்கலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், என் மகளை வரதட்சணை கேட்டு அவரது கணவர் செல்வின் சுனில் ராஜ் மற்றும் அவரது தாயார் சுசீலா ஆகியோர் கொடுமைபடுத்தியதாக கூறியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.