முன் விரோதம் காரணமாக இளைஞர் படுகொலை... கடைகள் அடைக்கப்பட்டதால் தூத்துக்குடியில் பதற்றம்.!



young-man-was-brutally-murder-due-to-prior-hostility-po

தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட இளைஞரின் நண்பர்கள் நடு ரோட்டில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்து கடைகளை அடைக்கச் சொன்னதால் அப்பகுதியில்  பதற்றம்  நிலவியது.

தூத்துக்குடி அண்ணா நகர் நான்காவது தெருவை சேர்ந்தவர் ஆவுடையப்பன் என்ற வன்னியராஜ் இவர் மில்லர்புரம் பகுதியில்  பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி கணேசன் என்ற 24 வயது மகனும் ஒரு மகளும் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இவரை விட்டு இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.

தற்போது ஆவுடையப்பனின் மனைவி  தனது மகளுடன் கே டி சி நகர் பகுதியில்  பெயிண்டர் சுடலைமணி என்பவருடன் வாழ்ந்து வருகிறார். இதன் காரணமாக ஆவுடையனுக்கும் சுடலைமணிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு டிஎம்பி காலனி பகுதியில் தனது நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார் கணேசன். அப்போது அங்கு வந்த மர்ம  நபர் கணேசனை சரமாரியாக  வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி சத்யராஜ் தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம், எஸ்.ஐ.க்கள் சிவகுமார், சேகர் மற்றும் போலீசார்  ரத்த வெள்ளத்தில் கிடந்த கணேசனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் கணேசன். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்  தலைமறைவாக உள்ள சுடலைமணியை தேடி வருகின்றனர். மேலும் இன்று காலை அண்ணாநகர் பகுதிக்கு வந்த கணேசனின் ஆதரவாளர்கள் அவரது கண்ணீர் அஞ்சலி போஸ்டரை நடுரோட்டில் ஒட்டினர். மேலும் அப்பகுதியில் இருந்த கடைகளையும் அவர்கள் அடைக்க  சொன்னதால் பதற்றம் நிலவுகிறது.