இரு சமூகத்தினரிடையே மோதல், ஒருவர் உயிரிழப்பு! மதுரையில் பதற்றம்!

இரு சமூகத்தினரிடையே மோதல், ஒருவர் உயிரிழப்பு! மதுரையில் பதற்றம்!



young boy died in melur

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கொடுக்கம்பட்டியில் திருவிழாவின் போது இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.


மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கொடுக்கம்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு கோவில் திருவிழாவில் நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பார்க்க கோவில்பட்டியை சேர்ந்த ராம்பு , கொடுக்கம்பட்டியை சேர்ந்த சங்கையா, சுபாஷ் மற்றும் கச்சிராயன்பட்டியை சேர்ந்த தயாளன் ஆகிய 4 இளைஞர்களும் சேர்ந்து 2 மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்தனர்.

அவர்களுடைய வாகனம்  கொடுக்கம்பட்டி அருகில் வந்தபோது ஒரு கும்பல் 4 பேரையும் வழிமறித்து, டூவீலர்களை நொறுக்கி 4 பேரையும் கல்லால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அவர்கள் நடத்திய தாக்குதலில் 4 பேரும் படுகாயமடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

Murder

தாக்குதலில் படுகாயம் அடைந்த ராம்பு சிகிச்சைபலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் மருத்துவமனை முன்பு பனங்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் கைவிடப்பட்டது.

இந்தநிலையில் கொடுக்கம்பட்டி பகுதியில் இருபிரிவினர் இடையே மோதல் ஏற்படும் வகையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.