பெண்களின் முற்றுகையால் ஸ்தம்பித்த நெய்வேலி: பணிந்த என்.எல்.சி நிர்வாகம்..!Women protesting for drinking water at neyveli

கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகேயுள்ள கொல்லிருப்பு காலனி பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு என்.எல்.சி நிர்வாகம் தனது பழைய கரிகட்டி ஆலை பகுதியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக அந்த பகுதியினருக்கு குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர். தண்ணீர் வழங்கப்படாததது குறித்து புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் என்.எல்.சி நிறுவனத்தின் புதிய சேவை பகுதி நுழைவு வாயில் முன்பு ஒன்று திரண்டனர்.

இதன் பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த என்.எல்.சி நிறுவன துணை பொது மேலாளர் முனியராஜ் மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண்கள் தங்கள் பகுதிக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதிலளித்த அதிகாரிகள், தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர். மேலும் குழாய் சீரமைக்கப்படும் வரை லாரி மூலம் குடிநீர் வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். இதன் பின்னர் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.