தமிழகம் இந்தியா

விடுதியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.. திருப்பூர் தொழிற்சாலைகளில் தொடரும் மர்ம தற்கொலைகள்.!

Summary:

விடுதியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.. திருப்பூர் தொழிற்சாலைகளில் தொடரும் மர்ம தற்கொலைகள்.!

அவிநாசி அருகேயுள்ள ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த வடமாநில பெண் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் விஷயத்தில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்திரபிரதேசம் மாநிலத்தை சார்ந்த 150 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி கைகாட்டிபுதூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நிறுவனத்தின் சார்பில் விடுதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ள நிலையில், விடுதியில் தங்கியிருந்து பணியாற்றி வருகிறார்கள். 

இந்த நிலையில், ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றிய நிர்மலா என்ற பெண் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நிர்மலா தங்கியிருந்த அறையிலேயே இந்த சோகம் நடந்தது. இந்த விஷயம் குறித்து சக தோழிகள் விடுதி நிர்வாகத்திற்கு தகவ தெரிவித்த நிலையில், தொழிற்சாலை நிர்வாகம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. 

பெண்ணின் சடலத்தை மீட்டு அவர்களாகவே மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், காவல் துறையினருக்கு இந்த தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். விசாரணையில், கடந்த 22 ஆம் தேதி நிர்மலா உடல்நலக்குறைவால் விடுமுறை எடுத்துள்ளார். 

பின்னர், மறுநாளில் பணிக்கு சென்ற நிர்மலாவை, தொழிற்சாலை நிர்வாகம் அவரை திருப்பி அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதன்பின்னர் தற்கொலை நடந்துள்ளது என விசாரணையில் முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது. காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

விடுதியில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துவிட்டார் என்று தெரிந்தால், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் ஆளை நிர்வாகம் ஏன் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றது? அங்கு நடந்தது என்ன? என்பது குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 


Advertisement