பணி முடிந்து வீடு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. 2 கால்கள் இழந்த நிலையில் பலியான சம்பவம்..!

சென்னை மாங்காடு அம்பாள் நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் தோழிகளான நித்யா மற்றும் ரோகினி. இவர்கள் இருவரும் அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இருவரும் வழக்கம்போல் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வானகரம் சிக்னல் அருகே வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் கண்டெய்னர் லாரி ஒன்று அதிவேகமாக மோதியது.
இதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்ததில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நித்யாவின் கால்களில் லாரி டயர் ஏறி இறங்கியது. இதில் அவரது கால்கள் துண்டாகியதோடு ரோகினிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து நித்யாவின் இரண்டு கால்களும் அகற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நித்தியா பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து ரோகினிக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரான மோகன் என்பவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.