தந்தை இறந்த துக்கத்தில், மாரடைப்பால் மகனும் மரணம்.. கண்ணீரில் குடும்பத்தினர்.!
தந்தை இறந்த துக்கத்தில், மாரடைப்பால் மகனும் மரணம்.. கண்ணீரில் குடும்பத்தினர்.!

வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் தந்தை உயிரிழந்த செய்தியை அறிந்த மகனும், தந்தையின் உடலை பார்த்து பதறி மாரடைப்பு வந்து பலியான சோகம் நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ண நகரில் வசித்து வருபவர் வடிவேல் (வயது 92). இவரின் மகன் நாராயணமூர்த்தி (வயது 38). இவர் தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி ரஞ்சித் பிரியா (வயது 27). தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
வடிவேல் வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்த நிலையில், மகன் தந்தையை பல்வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளார். நேற்று காலை நேரத்தில் நாராயணமூர்த்தி வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட, வடிவேல் வீட்டில் உயிரிழந்துள்ளார்.
இந்த தகவலை நாராயணமூர்த்திக்கு குடும்பத்தினர் தெரிவிக்கவே, வீட்டிற்கு வந்தவர் தந்தையின் சடலத்தை பார்த்து கதறியழுதுள்ளார். அப்போது, அவருக்கு தீடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு, மாரில் கைவைத்தவாறு மயங்கி சரிந்துள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்ட நாராயணசாமி, சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, தந்தை - மகனின் உடலை குடும்பத்தினர் அருகருகே நல்லடக்கம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.