2 வீலர் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. கணவன் - மனைவி துடிதுடிக்க மரணம்..!Tiruppur Kangeyam Couple Died Accident when Went to Temple With Son

கோவிலுக்கு மகனுடன் சென்ற போது, தம்பதியின் வாகனம் விபத்திற்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், தம்பதியின் மகன், மற்றொரு வாகன ஓட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம், காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் கோபி (வயது 34). இவரின் மனைவி மல்லிகா (வயது 25). தம்பதிகளுக்கு சரண் என்ற 6 வயது மகன் இருக்கிறார். இவர்கள் இருவரும் திருப்பூரில் செயல்பட்டு வரும் பனியன் நிறுவனத்தில் டைலராக பணியாற்றி வருகிறார்கள். 

இந்நிலையில், நேற்று சிவராத்திரியை முன்னிட்டு தம்பதிகள் இருவரும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்றுள்ளனர். காங்கேயம் - தாராபுரம் சாலையில் உள்ள புதுப்பாளையம் பிரிவில் சென்ற போது, பெட்ரோல் போடுவதற்காக கோபி வாகனத்தை சாலையில் திருப்பி இருக்கிறார். 

பின்னால், காங்கேயம் ஊதியூர் கருக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்த நில விற்பனையாளர் ஜெகநாதன் (வயது 35) தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது, இவர்கள் இருவரின் வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில், வாகனத்தில் பயணம் செய்த நால்வரும் தூக்கி வீசப்பட்டன. 

Tiruppur

படுகாயத்துடன் துடிதுடித்த நால்வரையும் மீட்ட பொதுமக்கள், சிகிச்சைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோபி உயிரிழந்துவிட, மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லப்பட்ட மல்லிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

பலத்த காயத்துடன் இருக்கும் சரண் மற்றும் ஜெகநாதனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்து தொடர்பாக காங்கேயம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.