தமிழகம்

பெண்களை கேலி, கிண்டல் செய்து அட்டகாசம்.. பஸ் ஸ்டாண்டில் பள்ளி - கல்லூரி மாணவர்கள் மோதல்.!

Summary:

பெண்களை கேலி, கிண்டல் செய்து அட்டகாசம்.. பஸ் ஸ்டாண்டில் பள்ளி - கல்லூரி மாணவர்க மோதல்.!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பேருந்து நிறுத்தத்தில், நேற்று மாலை நேரத்தில் கும்பலாக நின்ற பள்ளி - கல்லூரி மாணவர்கள், திடீரென இரண்டு பிரிவாக பிரிந்து மோதிக்கொண்டனர். பேருந்து நிறுத்தத்தில் இருந்த பொதுமக்கள் அவர்களை கண்டித்து சமாதானம் செய்தும் கேட்காமல், ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர்.

மேலும், தாக்குதல் சம்பவத்தை தீவிரப்படுத்தும் பொருட்டு, கற்கள் வீசி தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில், பேருந்து நிறுத்தத்தில் பூ வியாபாரம் செய்துகொண்டு இருந்த பெண்ணின் தலையில் காயமும் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு சூழல் ஏற்படவே, உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்த நிலையில், அதிகாரிகளை கண்டதும் அல்லு சில்லுகள் அனைத்தும் தலைதெறித்து தப்பியோடியது. விசாரணையில், பள்ளி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில், ஒரு மாணவர் தனது தரப்பு ஆட்கள் என கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து பேருந்து நிலையத்தில் கலவரம் செய்தது தெரியவந்தது. 

இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விஷயம் தொடர்பாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கையில், "பள்ளி - கல்லூரி மாணவர்களிடையே மோதல் என்பது தொடர்கதையாகியுள்ளது. பெண்களை கேலி, கிண்டல் செய்வதால் தகராறு நடக்கிறது. அதிகாரிகள் இதனை கண்காணிக்க வேண்டும்" என்று தெரிவிக்கின்றனர்.


Advertisement