
அடுத்தடுத்த தொடர் மின்வெட்டு பிரச்சனை.. மெழுகு ஏற்றி பொதுத்தேர்வுக்கு படிக்கும் தமிழக மாணவர்கள்.!
12ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள், மின்வெட்டு காரணமாக மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில், சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரத்தில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
இதனால் விவசாயிகள் மற்றும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இரவு நேரத்தில் மாணவர்கள் படிக்க இயலாமல் சிரமப்படுகின்றனர்.
தற்போது செய்முறை பொது தேர்வு தொடங்கியுள்ள நிலையில், சில மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகளும் நடந்து வருகிறது. ஆனால், 4 மணி முதல் 9 மணி வரை பல்வேறு இடங்களில் திருவள்ளூர் மாவட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
இதனால் கிராமப்புற பகுதியில் தேர்வுக்கு தயாராக மாணவர்கள் வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதே நிலை இப்படியே தொடர்ந்தால் 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதிலும், சிக்கல் ஏற்படும் என்று ஊர் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி கற்றல் திறன் பாதிக்கப்படும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தடையின்றி மின்சாரம் வழங்குவதற்காக மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் வைத்துள்ளனர்.
Advertisement
Advertisement