இருட்டில் ஓடிய அரசு பேருந்து... செல்போன் வெளிச்சத்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி!



thirupathur Passengers Travelled Using Mobile Torchlight in Government Bus

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு தினமும் அரசு டவுன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலூர், திருப்பத்தூர், துவரங்குறிச்சி, நத்தம், பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகளை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நம்பியே அன்றாட பயணங்களை மேற்கொள்கின்றனர். 

ஆனால் சில பேருந்துகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இயக்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் பேருந்துகளின் மேற்கூரை வழியாக மழைநீர் உள்ளே சொரிகிறது என்றும், கதவுகள் சரியாக இயங்காத நிலையும் இருப்பதாக கூறப்படுகிறது. 

அதோடு இரவு நேர பயணங்களில் முகப்பு விளக்குகள் கூட எரியாமல் இயக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில் திருப்பத்தூர் பணிமனையைச் சேர்ந்த அரசு பேருந்து ஒன்று நேற்று முன்தினம் இரவு சிங்கம்புணரியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி புறப்பட்டது. 

இதையும் படிங்க: நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறையா.? வெளியாகும் அறிவிப்பு!

அப்போது பேருந்தின் முகப்பு விளக்குகள் செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. இருள் சூழ்ந்த சாலையில் பேருந்தை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பேருந்தில் இருந்த கண்டக்டர் மற்றும் பயணிகள் பலரும் தங்களது செல்போன் டார்ச் விளக்குகளை ஒளிரவிட்டு உதவி செய்துள்ளனர். 

அந்த மங்கலான வெளிச்சத்திலேயே ஓட்டுநர் பேருந்தை மெதுவாக இயக்கி திருப்பத்தூர் வரை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பழுதடைந்த பேருந்துகளை தொடர்ந்து சாலையில் இயக்குவது பெரிய அசம்பாவிதங்களுக்கு வழிவகுக்கும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

நல்ல வேளையாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக தொழில்நுட்ப கோளாறுகள் கொண்ட பேருந்துகளை அகற்றி, பாதுகாப்பான புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: காட்டுக்குள் மலம் கழிக்க சென்ற 12 ஆம் வகுப்பு மாணவி! உடல் துண்டு துண்டாகக் வெட்டப்பட்ட நிலையில் ..... தூத்துக்குடி அருகே நடந்த கொடூரம்!!!