சாதிய தீண்டாமையால் இஸ்லாமியராக மாறிய 40 இந்து தலித்துகள்.. தேனி அருகே அதிர்ச்சி.!Theni Bodinayakanur Dombucheri Village 40 Dalits Converted Muslim Islam Religion

தலித் சமுதாயத்தில் இருப்பதால் தங்களுக்கு உரிய மரியாதை கிடைப்பது இல்லை. சமூகத்தின் பெயரால் துன்புறுத்தப்படுகிறோம் என்று கூறி 40 பேர் இஸ்லாமிய மதத்தை தழுவிய சம்பவம் தமிழகத்தை அதிரவைத்துள்ளது. 

தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர், டொம்புச்சேரி கிராமத்தில் பல சமூகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. டொம்புச்சேரி கிராமத்தில் சாதிய ரீதியிலான கொடுமைகள் நிகழ்வதாக தெரியவரும் நிலையில், அதனால் பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் உட்பட 40 பேர் இஸ்லாமிய மதத்தை தழுவியுள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக கலைக்கண்ணன் என்ற முகம்மது, வைரமுத்து என்ற முகம்மது அலி ஜின்னா, வீரமணி என்ற யாசர் அராபத் (மதம் மாறியவர்கள்) ஆகியோர்கள் தெரிவிக்கையில், "கடந்த 2021 தீபஒளி நாளில் தலித் மக்கள் வசித்து வரும் பகுதிக்கு வந்த மற்றொரு சமூகத்தார், எங்களின் சமுதாயம் குறித்து அவதூறாக பேசி தாக்குதல் நடத்தினார்கள். இருதரப்பு மோதலில் ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது. உடமைகள் சேதப்படுத்தப்பட்டது. இந்த விஷயம் தொடர்பான விசாரணை காவல் துறையினரால் நடத்தப்பட்டு வருகிறது. 

நாங்கள் வாழும் பகுதியில் சாதிய ரீதியிலான கொடுமைகள் அதிகரித்து இருக்கிறது. தலித்தாக இருப்பதால் எங்களை கொடுமை செய்கிறார்கள். இதனால் நாங்கள் மதம்மாற விரும்பினோம். எங்களின் சுய விருப்பத்தின் பேரில் இஸ்லாம் மார்கத்தை தேர்வு செய்துள்ளோம். இந்துவாக இருந்தும் தலித்தாக இருப்பதால், எங்களால் ஊரில் உள்ள கோவிலுக்குள் செல்ல இயலவில்லை. தற்போது இஸ்லாமிய மார்கத்தை தழுவியுள்ளதால், எந்த பள்ளிவாசலுக்கு சென்றும் இறைவணக்கம் செய்ய இயலும். 

Theni

கடந்த காலங்களில் உள்ளதை போல இரட்டைக்குவளை முறைகள் இன்றளவிலும் இங்கு உள்ளன. முடிதிருத்தம் செய்ய மறுப்பு தெரிவிக்கிறார்கள். இதனால் அருகே இருக்கும் பிற ஊர்களுக்கு சென்று சிகையலங்காரம் செய்து வந்தோம். இந்த சாதிய தாக்குதல்களால் தலித் மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படுவதால், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. கூலி வேலை செய்து பிழைத்து வரும் நாங்கள் தாக்குதலுக்கு பயந்து ஆறு மாதம் வீடு, ஆறு மாதம் காடு என வாழ்கிறோம். 

இதனால் எங்களின் குடும்ப வருமானம் பாதிக்கப்பட்டு, குடும்பத்துடன் நிம்மதியாக கூட வாழ இயலவில்லை. இதனால் நாங்கள் 40 பேர் குழுவாக பேசி இஸ்லாமிய மாதத்திற்கு மாறிஉள்ளோம். மதமாற்றத்திற்கு பின்னர் வெளியூர்களில் உரிய மரியாதை கிடைக்கிறது. விரைவில் உள்ளூரிலும் அது கிடைக்கும் என நம்புகிறோம்" என்று கூறினர்