மாத கணக்கில் கடைகளில் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கும் மதுபானங்கள்... பணியாளர் சங்கம் அறிக்கை..!!
மாத கணக்கில் கடைகளில் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கும் மதுபானங்கள்... பணியாளர் சங்கம் அறிக்கை..!!

மதுபானங்கள் விற்பனையாகாமல் டாஸ்மாக் கடைகளில் தேங்கிக்கிடக்கின்றன என பணியாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க தலைவர் நா.பெரியசாமி, த.தனசேகரன் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழக டாஸ்மாக் நிர்வாகம் கடந்த மாதம் 29-ஆம் தேதி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. அதில், பணியாளர்களின் தொழிற்சங்க உரிமையை பறிக்கும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன அதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளோம்.
டாஸ்மாக் நிர்வாகத்தில் மதுபான சில்லரை விற்பனை பிரிவில் விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் என சுமார் 25 ஆயிரம் பேர் 20 வருடங்களாக தொகுப்பூதிய ஒப்பந்த பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு பணி பாதுகாப்பு எதுவும் இல்லை. மேலும், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
சமீபகாலமாக, மதுபானங்கள் கொள்முதல் செய்வதில் டாஸ்மாக் நிர்வாகம், மது நுகர்வோர் விரும்பும் மதுபானங்களை கொள்முதல் செய்வதில்லை, மாறாக மற்ற வகைகளுக்கு முன்னுரிமை தரப்படுகிறது. இதனால் மதுக்கடைகளில் மதுபானங்கள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. வேலை செய்பவர்களை மிரட்டியும், அழுத்தம் கொடுத்தும் முறைகேடாக பணம் பறிக்கும் முறை தொடர்ந்து நடக்கிறது.
டாஸ்மாக் நிர்வாகத்தின் ஊழியர்கள் விரோத நடைமுறைகள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அரசின் கவனத்துக்கு தெரிவித்து, ஊழியர்கள் உரிமையை பறிக்கும் நிபந்தனைகள் கொண்ட டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். என்று அதில் கூறப்பட்டுள்ளது.