சொத்தை அபகரிக்க திட்டமிட்ட அண்ணி!. தம்பியுடன் சேர்ந்து சதித்திட்டம்: பரிதாபமாக பலியான விவசாயி..!The farmer was killed by his sister-in-law's family in a property dispute

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் ( 46). இவர் ஒரு விவசாயி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு முருகேசன் (51) என்ற அண்ணணும், சரவணன் (41) என்ற தம்பியும் உள்ளனர். இவர்களில் முருகேசன் என்பவரது மனைவி தமிழ்செல்வி (40). சரவணனுக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இவர்கள் அனைவரும் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் அண்ணன், தம்பிகளுக்கு சொந்தமான 12 ஏக்கர் விவசாய நிலம் கெஜகோம்பை கிராமத்தில் உள்ளது. இந்த சொத்தை அடைய நினைத்த தமிழ்ச்செல்வி மற்றும் அவருடைய தம்பி கேசவன் (32) மற்றும் தமிழ்ச்செல்வி தந்தை மோகன் ஆகியோர் செல்வராஜிடம் உன் தம்பிகளுக்கு இனியும் திருமணம் நடக்காது. எனவே 12 ஏக்கர் நிலத்தை தங்களது பெயருக்கு எழுதி வைக்கும்படி கேட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக முருகேசன், அவருடைய மனைவிக்கிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை செல்வராஜ் கெஜகோம்பையில் உள்ள தனது தோட்டத்திற்கு நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது தோட்டத்திற்கு அருகே உள்ள கரும்பு தோட்ட பகுதியில் தலையில் பலத்த ரத்தக்காயத்துடன் செல்வராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக எருமப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் சொத்து தகராறு காரணமாக கோபத்தில் இருந்த தமிழ்செல்வி, கேசவன், மோகன் மற்றும் கன்னியப்பன் ஆகியோர் தோட்டத்துக்கு சென்ற செல்வராஜை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கேசவனை கைது செய்த காவல்துறையினர் தலைமறைவான தமிழ்செல்வி, மோகன் மற்றும் கன்னியப்பனை வலைவீசி தேடி வருகின்றனர். சொத்து தகராறில் விவசாயியை அவரது அண்ணியின் குடும்பத்தினரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.